மட்டக்களப்பு ஆரையம்பதியில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவால் 2 முஸ்லிம்கள் இன்று பிற்பகல் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. சிறிலங்கா காவல்துறையினரின் ஊடரங்குச் சட்டம் அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
காத்தான்குடியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் பிள்ளையான் குழுவினரின் முக்கிய உறுப்பினரும் ஆரையம்பதி பிள்ளையான் குழுப் பொறுப்பாளருமான சாந்தனும் அவரது பாதுகாவலரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
முஸ்லிம்கள் பெருமளவில் வாழ்கின்ற பகுதி காத்தான்குடி என்பதால் முஸ்லிம்கள் இருவரை துணைப்படையினர் ஆரையம்பதியில் இன்று பிற்பகல் 12.15 மணியளவில் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
ஆரையம்பதியில் தொலைத் தொடர்பு நிலையம் நடத்தி வந்த மன்சூர் என்பவரும் அவரது உதவியாளரும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவங்களையடுத்து மட்டக்களப்பில் பெரும் பதற்றம் நிலவுகின்றது.
ஊடரங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் துணைப்படை பிள்ளையான் குழுவினர் ஆயுதங்களுடன் வீதிகளில் நடமாடுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் சிறிலங்காப் படையினரும், காவல்துறையினரும் வீதிகளில் பெருமளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
ஊடரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் காத்தான்குடி உள்ளிட்ட மட்டக்களப்பு நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
இதனிடையே மண்முனையிலும் முஸ்லிம் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அதனை உறுதிப்படுத்த இயலவில்லை என்று எமக்கு கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment