கொழும்பு லோட்டஸ் வீதியில் சம்போதி விகாரைக்கு முன்னால் உள்ள கலக தடுப்பு காவல்துறையினர் எந்த சம்பவத்தையும் எதிர்கொள்ளும் நோக்கில் தயாரான நிலையிலேயே இருந்தனர். ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டகாரர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என அவர்களுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஒரு வேட்பாளருக்கு நாள் முழுதும் இரண்டு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கிழக்கு மாகாண சபை தேர்தலின் சூடு இதுரை தனியவில்லை. இதேபோலவே கடந்த 16ஆம் திகதி காவல்துறையினருக்கும் மிகவும் கடினமாக பலவேலைகள் வழங்கப்பட்டிருந்தன.
இதில் ஒன்று ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் மருதானையில் ஒழுங்கு செய்திருந்த ஆர்ப்பாட்டம். மற்றையது கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியேற்பு வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் அன்றைய தினம் நடைபெறவிருந்தது.
இந்த பதவியேற்பு வைபவத்தை குழப்ப கூடிய எந்த ஒரு சம்பவத்தையும் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு மேல் மட்டத்தில் இருந்து உத்தரவிடப்பட்டிருந்தது. இதனடிப்படையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்வதை தடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
கலகதடுப்பு காவல்துறையினரின் மூன்று பேரூந்துகள் சம்போதி விகாரைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தன. இதில் ஒரு பேரூந்து பேலியகொட காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களை ஏற்றி வந்த பேரூந்தாகும்.
கலக தடுப்பு பிரிவினர் நீர்பாய்ச்சி வாகனங்களுடன் தயாரான நிலையில் இருந்தனர். கிழக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்கும் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் அவரது ரி.எம்.வி.பியின் உறுப்பினர்கள் இந்த வழியாகவே ஜனாதிபதி செயலகத்திற்கு செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.
இவர்கள் அருகில் உள்ள ஹில்டன் 5 நட்சத்திர விடுதியிலேயே தங்கியிருந்தனர். இந்த நிலையில் காவல்துறையினர் ஏற்பட கூடிய அச்சுறுதல் குறித்து மதிப்பீடு செய்திருந்தனர். எனினும் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இருக்கவில்லை என்பது உறுதியாகியது.
கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மதியம் 12 மணிக்கு பின்னர் ஏற்பட்ட அனர்த்தில் சிக்கிகொண்டனர். அமைச்சர்காமினி லொக்குகே பயணம் செய்த அவரின் வாகனம் சம்போதி விகாரையை தாண்டி சென்ற போது, புலிகள் தற்கொலை போராளி வெடிப்பொருட்களை நிரப்பிய மோட்டார் சைக்கிளை காவல்துறை பேரூந்தில் மோதி வெடிக்க செய்தார்.
இதன் போது பேரூந்தில் காவல்துறையினர் பலர் இருந்தனர். பாரிய சத்தத்துடன் வெடித்து சிதறிய இந்த குண்டில் 8 காவல்துறையினர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் அமைச்சர் காமினி லொக்குகேயின் சாரதி.
சம்பவத்தில் 94 பேர் காயமடைந்தனர், காயமடைந்தவர்கள் அதிகமானோர் பொது மக்கள். காயமடைந்த காவல்துறையினரில் அதிகமானோர் பேலியகொட காவல்துறையை சேர்ந்தவர்கள்.
பேரூந்து தீபற்றி எரிந்ததுடன், வேறு சில காவல்துறை வாகனங்களும் சேதமடைந்தன. அமைச்சர் லொக்குகேயின் வாகனம். ரி.எம்.வி.பியினரை ஏற்றிய வாகனம் என குண்டுதாரி தவறாக நினைத்து செயற்பட்டாரா?
பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளும் பிள்ளையான் மற்றும் அவரது பரிவாரங்களின் வருகை அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இந்த மோட்டார் சைக்கிள் இதற்கு முன்னரும் இந்த பகுதியின் ஊடாக சென்றதை காவல்துறையினர் பார்த்துள்ளனர்.
எனினும் காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் தொடர்பில் சந்தேகம் கொள்ளவில்லை. இந்த தற்கொலை குண்டுதாரி தனது இலக்கு அருகில் செல்லும் வரை காத்திருந்துள்ளதாகவும் எதிர்பார்த்த இலக்கு தவறிய பட்சத்தில், சந்தர்ப்பத்தில் கிடைத்த இலக்கான காவல்துறை பேரூந்தை நோக்கி மோட்டர் சைக்கிளை மோதி அதனை வெடிக்க செய்திருப்பதாக விசாரணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பதிவிலக்கம், ஈ.பீ. எம். இஸட் 3875 என குறிப்பிட்டப்பட்டிருந்தது. இதனடிப்படையில் இந்த வாகனம் கிழக்கு மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
விசாரணையாளர்களின் முடிவுக்கு அமைய குண்டு வெடிப்புக்கு சீ 4 ரகத்தை சேர்ந்த வெடி மருந்து சுமார் 4 கிலோ கிராம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாரிய அழிவை ஏற்படுத்த கூடியது. 2006ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஹபரணை திகம்பத்தானை பிரதேசத்தில் கடற்படையினர் 100 பேர் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்த தற்கொலை தாக்குதலுக்கு சமனான தாக்குதல் இதுவென தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் 8 காவல்துறை சிப்பாய்கள் கொல்லப்பட்டதுடன் 30 காவல்துறையினர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு முச்சக்கர வண்டி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என முன்னர் கருத்தப்பட்டது, முச்சக்கர வண்டிகள்; சில சம்பவம் இடம்பெற்ற இடத்தில் சிதறுண்டு கிடைந்தமையே இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
எனினும் இந்த முச்சக்கர வண்டிகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தவை என தற்போது தெரியவந்துள்ளது. இந்த முச்சக்கர வண்டிகளின் சாரதிகளும் இந்த அனர்த்தில் சிக்கியுள்ளனர். இந்த நிலையில் இந்த தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்களின் உரிமையாளர் கடந்த சனிக்கிழமை திருகோணமலை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்டவர் ஜனா என்று அழைக்கப்படும் விஜயபாலன் ஜெநேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த நபர் ரி.எம்.வி.பியின் முக்கிய உறுப்பினராவார். அந்த கட்சியின் திருகோணமலை அலுவலகத்தின் கீழ் இவர் செயற்பட்டு வருகிறார்.
இதனிடையே எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க குண்டு வெடிப்பு குறித்து குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். இந்த சம்பவம் தொடர்பில் ரி.எம்.வி.பியின் திருகோணமலை உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதை அடுத்து அரசாங்கம் விசாரணைகளை தவறான வழியில் முன்னெடுத்து செல்ல முயன்று வருவதாக ரணில் விக்கிரமசிங்க குற்றம்சுமத்தினார்.
விசாரணைகளில் திருகோணமலை காவல்துறையினரை அகற்றி விட்டு, குற்றபுலனாய்துறையில் கீழ் விசாரணைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சாதரணமாக இவ்வாறான சம்பவங்கள் குறித்த விசாரணைகளை குற்ற புலனாய்வு திணைக்களம், பயங்கவாத செயல் தடுப்பு பிரிவினர் மேற்கொள்வர் எனவும் அவர் கூறினார்.
முன்னதாக காவல்துறையினர் நகரில் உள்ள விடுதலைப்புலிகள் செயற்பாட்டாளர்களை கைதுசெய்து, தெற்கில் புலிகளின் சிறிய குழுக்களின் நடவடிக்கைகளை முடக்கியிருந்தனர்.
சுமார் ஒரு டசின் தங்கொலை அங்கிகளை தென்பகுதிக்கு எடுத்து சென்றதாக வாக்குமூலம் அளித்த நகுலன் என்ற மாற்று மத போதகர் இவ்வாறானவர்களில் ஒருவர். கைதுசெய்யப்பட்ட இவ்வாறான விடுதலைப்புலி சந்தேகநபர்களின் தகவல்களின்படி தற்கொலை அங்கள் பல கைப்பற்றபட்டுள்ள போதிலும், கைப்பற்றபடாத அங்கிகள் பல உள்ளன.
கடந்த மாதத்தில் காவல்துறையினர் கொத்மலையில் மறைந்திருந்த இரண்டு விடுதலைப்புலி சந்தேக நபர்களை கைதுசெய்தனர். இவர்களில் ஒருவர் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்துகொண்டவர் மலையகத்தில் புலிகளின் சிறிய குழுவினரை வழி நடத்திய பயங்கவாத தலைவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கொல்லப்பட்ட தனது இணைப்பதிகாரி ஸ்டீபன் பீரிசின், தான வைபவத்தில் கலந்துகொள்வதற்காக நானுஓயாவுக்கு விஜயம் செய்யும் போது, அவரை கொலை செய்ய திட்டமிடப்பட்டமை குறித்து இந்த சந்தேக நபர் மூலம் தெரியவந்தது.
கைதுசெய்யப்பட்ட மற்றைய சந்தேக நபரின் அடையாள அட்டையின் படி அவரது பெயர் ராஜதுரை தயாளன் எனவும் இவர் குண்டு தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் எனவும் முக்கிய நபர் ஒருவரை கொலை செய்யும் நோக்கில் அவர் கிளிநொச்சியில் இருந்து அனுப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கிழக்கு மாகாண சபை தேர்தல் நெருங்கும் தறுவாயில் கடற்படையினரால் 4 தற்கொலை அங்கிகள் மீட்கப்பட்டன.
இவற்றில் இரண்டு தலா மூன்று கிலோ கிராம் வெடிபொருட்களை நிரம்பிய அங்கிகளாகும், இவை முக்கிய நபர்களை கொலை செய்யும் நோக்கில் பயன்படுத்தப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய இரண்டில் தலா 10 கிலோ கிராம் வெடிப்பொருட்கள் நிரப்பபட்டிருந்தன. இவை படையினர் கூடும் இடங்களை இலக்கு வைத்து தாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டவை என சந்தேகிக்கப்படுகிறது. இதனிடைய புத்தளம் அறபா வீதியில் உள்ள பாழடைந்த தோட்டம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றின் ஆசனத்திற்கு கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்த 127 ஜெலக்னைட் கூறுகள் கடந்த வியாழக்கிழமை புத்தளம் காவல்துறையினரால் மீட்கப்பட்டது.
போர் முனையில் புலிகள் இறுக இறுக, அவர்கள் தெற்கில் இலகுவான இலக்குகளை தாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.
(நன்றி லக்பிம and global tamil news)

No comments:
Post a Comment