தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்குக் குறித்த விசாரணை அறிக்கைகள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி நாரஹேன்பிட்டிய பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
“ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் இந்தப் படுகொலை குறித்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன. எனினும், இக்கொலை குறித்த விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்னமும் முடிக்கவில்லை. இரண்டு சந்தேகநபர்கள் தடுத்துவைக்கப்பட்டிருப்பதுடன், விசாரணைகள் சுமுகமாக முன்னெடுக்கப்படுகின்றன” என குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் எம்.ஜீ.எம்.டபிள்யூ.முத்துபண்டா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குப் பணித்திருப்பதாகவும், சந்தேகநபர்களை மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு வலியுறுத்தியிருப்பதாகவும் சட்டமா அதிபர் சி.ஆர்.டி.சில்வா கூறியுள்ளார்.

No comments:
Post a Comment