சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறக்கோட்டை மற்றும் கொச்சிக்கடைப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் படையினரும், காவல்துறையினரும் மேற்கொண்ட சிறப்புத் தேடுதலில் 300-க்கும் அதிகமான தமிழர்கள் கைது செய்யப்பட்டு, இரண்டு பேருந்துகளில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
புறக்கோட்டை காவல் நிலையத்திற்கு ஏற்றிச் செல்லப்பட்டவர்களில் 15 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று சனிக்கிழமை அதிகாலை சுமார் 5:00 மணியளவில் இந்த தேடுதல் இடம்பெற்றது. தேடுதலை முன்னிட்டு புறக்கோட்டையின் சில பகுதிகளுக்கும், கொச்சிக்கடைப் பகுதிக்குமான போக்குவரத்துகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டன.
அதிகாலை முதல் படையினரும், காவல்துறையினரும் வீடுகளுக்குள் நுழைந்து தேடுதலில் ஈடுபட்டனர். அதிகாலை வேளை நித்திரையில் இருக்கும் போதே படையினரும் காவல்துறையினரும் வீடுகளுக்குள் நுழைந்ததால் அங்கிருந்த பெண்களும், சிறுவர்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்கள் உட்பட அனைவரையும் இரவு நேர ஆடைகளுடனேயே படையினரும், காவல்துறையினரும் வலுக்கட்டாயமாகக் கைது செய்து கொண்டு சென்றனர்.
வீடுகளுக்குள் சோதனை நடைபெற்ற அதேநேரம் வீதிகளிலும் கடும் சோதனை இடம்பெற்றது. இப்பகுதிக்கான பேருந்து சேவைகள் உட்பட அனைத்து போக்குவரத்துகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தன. பயணிகள், வர்த்தகர்கள் என எவருமே இப்பகுதியை விட்டு வெளியேறவோ, உள்நுழையவோ முடியாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டிருந்தன.
இந்தப் பெரும் தேடுதலில் கைது செய்யப்பட்ட 300-க்கும் அதிகமானோர் ஜிந்துப்பிட்டி விளையாட்டு மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முற்பகல் 10:30 மணி வரைக்கும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அதன் பின்னர் தனியாருக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகளைக் கொண்டு வந்த படையினர், அந்த பேருந்துகளில் கைது செய்யப்பட்டவர்களை ஏற்றி புறக்கோட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கே இவர்களிடம் துருவித்துருவி விசாரணைகள் இடம்பெற்றன.
தொடர்ந்தும் 15 பேர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரிலேயே 15 பேரை தடுத்து வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ள புறக்கோட்டை காவல் நிலையப் பொறுப்பதிகாரி, இவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக கொழும்பில் மீண்டும் தமிழர்கள் செறிவாக வாழும் பகுதிகளில் தீவிர தேடுதல்களும் கைதுகளும் இடம்பெறுவது குறித்து கொழும்பில் உள்ள மக்கள் மத்தியில் அச்சம் மேலோங்கி உள்ளது.
No comments:
Post a Comment