Saturday, 24 May 2008

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவை இரத்துச்செய்யக்கோரி 30ஆம் திகதி மனுத்தாக்கல்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து உயர்நீதிமன்றத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி மனுத்தாக்கல்செய்யவுள்ளன.

திகாமடுல்ல, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டங்களில் இடம்பெற்ற தேர்தல் மோசடிகள் தொடர்பாக மூன்று வௌ;வேறு மனுக்களைத் தாக்கல்செய்வதற்கு அந்தக் கூட்டணி தீர்மானித்துள்ளது.

தேர்தல்முடிவுகளை இரத்துச்செய்யுமாறு கோரியே தாம் இந்த மனுக்களைத் தாக்கல்செய்யவிருப்பதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். வாக்குப்பெட்டிகள் பலவந்தமாக நிரப்பப்பட்டமை, வாக்காளர்கள் தாக்கப்பட்டமை, அச்சுறுத்தப்பட்டமை போன்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து இந்த மனுக்களில் சுட்டிக்காட்டப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 10ஆம் திகதி நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலானது வன்முறைகள் நிறைந்தது என பவ்ரல் மற்றும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் அமைப்பு போன்றன குற்றஞ்சாட்டியிருந்தன.

நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் இடம்பெறவில்லை- நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான அமைப்பு

சட்டங்களை மீறல், அரசாங்கத்தின் சக்தியைப் பெருமளவில் பயன்படுத்தல் உட்பட பல்வேறு தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இடம்பெற்றிருந்ததாக நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் நீதியாகவும், சுதந்திரமாகவும் நடத்தப்பட்டது எனக்கூறமுடியாதென அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தல் மோசடிகள் குறித்து 136 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டிருந்ததாகவும், இதில் 89 முறைப்பாடுகள் குறித்து சரியான தகவல்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 2 படுகொலைகள், 6 கடத்தல்கள் 16 கொலை அச்சுறுத்தல்கள் போன்ற முறைப்பாடுகள் உள்ளடங்குகின்றன.

No comments: