ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உறுப்புரிமையை தக்கவைத்துக்கொள்ள இலங்கை தவறியிருப்பதால் வெளிநாட்டு உதவிகள் கிடைக்காமல் விடுவதற்கான அபாயம் காணப்படுவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது
மனித உரிமை மீறல் சம்பவங்கள் நிறுத்தப்படாமல் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக ஊடகவியலாளர் மாநாட்டில் சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜெயவர்த்தன, இனியும் மனித உரிமை மீறல்களை தடுத்துநிறுத்தாவிட்டால் இலங்கை பொதுநலவாய ஒன்றியத்தின் உறுப்புரிமையையும் இழக்க நேரிடும் எனக் கூறியுள்ளார்.
சர்வதேச நாடுகளை திருப்திப்படுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கான ஆசனத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியோர் தவறிவிட்டார்கள் எனவும் ஜயலத் ஜயவர்த்தன குற்றஞ்சாட்டினார்.
“சர்வதேச ரீதியில் இந்த நிலைமையானது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது விழுந்த அடியாகவே கருதப்படுகிறது” என்றார் அவர்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கப்பட்டபோதும் அது இலங்கை மக்களுக்குக் கிடைத்த வெற்றியென பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.
கடத்தல்கள், காணாமல்போதல்கள், கைதுகள், படுகொலைகள் போன்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் பாரியளவில் இலங்கையில் இடம்பெற்று வருகின்றன என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டிருப்பதை இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment