ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தெரிவுசெய்யப்படாமையானது ‘ஒழுங்காக நடந்துகொள்ளவேண்டும்’ என்ற செய்தியை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியிருப்பதாக படுகொலைகள் மற்றும் காணாமல்போதல்கள் தொடர்பான மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை பக்கச்சார்பாகச் செயற்படுகிறது, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் விடயங்களைத் தவிர்த்து இலங்கை விடயத்தில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுநாடுகள் இரட்டை வேடம்போடுவதாகக் குற்றஞ்சாட்டுவதற்கே இலங்கை விரும்பியது. “எனினும், அந்த நாடுகள் சர்வதேச ரீதியில் அரசியல் சக்திவாய்ந்த நாடுகள். ஆனால், எமது விடயத்தில் அவ்வாறு இல்லை. அங்கு சிறுபான்மையினர் பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு முகம்கொடுக்கவேண்டியுள்ளது. இலங்கையும், ஈராக்கும் ஒரே மாதிரியான நாடுகள் அல்ல” என மனோ கணேசன் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சர்வதேச சமூகம் செயற்படுவதாக இலங்கை குற்றஞ்சாட்டமுடியாது. விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொள்வதாக எந்தவொரு சமிக்ஞையையும் சர்வதேசம் வழங்கவில்லை. “அதன் அர்த்தம் என்னவெனில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சர்வதேச சமூகத்தின் நடவடிக்கை தொடரும் என்பதே. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்ரேலியா மற்றும் இந்தியா ஆகியன விடுதலைப் புலிகளைத் தடைசெய்துள்ளன” என்று மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளுக்கு சார்பாக நிதிசேகரித்தவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், புலிகளுக்கு ஆதரவான பல அமைப்புக்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. விடுதலைப் புலிகளுக்கு எதிராக சர்வதேச சமூகம் போதியளவு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. விடுதலைப் புலிகள் சரியான முறையில் செயற்படவேண்டும் என்பதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் ஏற்கனவே வழங்கியுள்ளது என்றார் மனோ கணேசன்.
இவ்வாறான நிலையில் இலங்கையில் அதிகரித்திருக்கும் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்தச் சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இடம்பெற்ற தேர்தல் இலங்கைக்குச் சாதகமாக அமையவில்லை. ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டும் என்ற செய்தியை இந்தத் தேர்தல் வலியுறுத்தி நிற்கிறது என மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment