தேசிய அடையாள அட்டை தொலைந்தால் அதனை மீண்டும் ஒருநாளில் பெற்றுக்கொள்ளும் சேவையை உடனடியாக நிறுத்துமாறு பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க, ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.
1968- 32ஆம் இலக்கச் சட்டத்துக்கு அமைய இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி செயற்பட்டால் ஆட்பதிவுத் திணைக்களத்துக்கு எதிராகப் பொலிஸார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என ஆணையாளருக்கு பிரதமர் கூறியுள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கைகள் உள்ளிட்ட குற்றச்செயல்களுக்கு போலியான தேசிய ஆளடையாள அட்டைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கவனத்தில்கொண்டு, நாட்டின் தேசிய பாதுகாப்பின்மீதான அக்கறையுடன் இந்தப் புதிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆட்பதிவுத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் நாட்டின் புலனாய்வு அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின் பின்னரே பிரதமர் இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். நாட்டின் பாதுகாப்புத் தொடர்பாகவும், சட்டவிரோதமான ஆளடையாள அட்டைகள் வழங்குவதைத் தடுப்பது தொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஆளடையாள அட்டைகளைப் பெறுவதற்கு நீண்டகாலம் காத்திருக்கவேண்டியிருந்த காலத்தில், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஒருநாள் ஆளடையாள அட்டைசேவகைள் 2002ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் மீண்டும் அமுலுக்குக்கொண்டுவரப்பட்டன.
பல்வேறு தேவைகளுக்கு ஆளடையாள அட்டை அத்தியாவசியமாக அமைந்துள்ளது. குறிப்பாக சோதனை நடவடிக்கைகளின் போது ஆளடையாள அட்டைக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டுவரும் இந்தக் காலகட்டத்தில் ஒருவருடைய ஆளடையாள அட்டை துலைந்தால் ஒருநாள் சேவைமூலம் மீண்டும் புதிய ஆளடையாள அட்டை பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய ஆளடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்டநாட்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலi ஏற்பட்டிருப்பதுடன், அந்தக் அடையாள அட்டை இல்லாத காலப்பகுதியில் அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

No comments:
Post a Comment