கடத்தல், காணாமற் போதல், கைது செய்யதல் ஆகியவற்றை பொது மக்கள் உடனடியாக முறைப்பாடு செய்து அது தொடர்பில் விவரங்களை அறிந்து கொள்வதற்காக 24 மணித்தியாலமும் இயங்கும் அலுவலகமொன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.
அமைச்சர் சமரசிங்க தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இச்சேவைக்குப் பொறுப்பான மேஜர் நவரத்ன இது பற்றிக் குறிப்பிட்டார். மேற்படி சேவைக்குப் பொது மக்கள் தமது முறைப்பாடுகளைத் தெரிவிக்க விரும்பினால் உடனடி தொலைபேசி இலக்கங்களான 0602119246, 0112676513 இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பொது மக்கள் காணாமற் போதல், கைது, கடத்தல் சம்பந்தமாக முறைப்பாடு செய்யலாம்.
இந்த அலுவலகத்தில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் என 3 மொழிகளிலும் பணியாற்றும் அதிகாரிகள் தொடர்ச்சியாக 24 மணித்தியாலமும் உரிய சேவைகளை பொது மக்களுக்குப் பெறறுக் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பொது மக்கள் செய்யும் முறைப்பாடுகள் சம்பந்தமாக உரிய அதிகாரிகள் அந்தந்தப் பகுதி பொலிஸாருடன் தொடர்புகொண்டு உண்மையில் நடந்ததென்ன? என்பதையும் இவர்களைச் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனரா? அவர்கள் சம்பந்தமாக விபரங்கள், அவர்கள் எங்கே தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர் என்பதை அதே இடத்தில் சேவை அதிகாரிகள் முறைப்பாடு செய்தவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பர்.
இதேவேளை, ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் இது போன்ற சேவையொன்று பொலிஸ் நிலைய மட்டத்தில் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன் சேவைகளும் தொடர்வதாகவும், சில பகுதிகளில் அச்சேவை நடைமுறையிலில்லை எனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேற்படி பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
இது தொடர்பாக அரசாங்கம் ஏற்கனவே ஒரு 24 மணி நேர ஹொட்லைன் இலக்கத்தையும் ஏற்பாடு செய்திருந்தது. இலங்கை மீதான மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுகள் ரொக்கட் வேகத்தில் அதிகரித்து இலங்கையை ஐ நாவின் மனித உரிமைக் கழகத்திவ் இணைய விடாமல் தடுத்திருந்தமை தெரிந்ததே. இப்புதிய ஏற்பாடுகள் எவ்வளவு தூரம் நடைமுறைச்சாத்தியம் என்றும் சட்டத்துக்கு புறம்பான வகையில் வெள்ளைவான் கடத்தல்களை இது எவ்வாறு கட்டுப்படுத்தும் என்ற கேள்விகளும் விடை தெரியாதவைகளாகவே உள்ளன.

No comments:
Post a Comment