தமிழீழ விடுதலைப் புலிகள் வசம் ஐந்துக்கும் அதிகமான சிலின்-143 ரக வானூர்திகள் உள்ளதாக சிறிலங்காப் படையினரின் புலனாய்வுதுறை தெரிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே லீடர்" தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
விடுதலைப் புலிகள் முல்லைத்தீவில் உள்ள தமது வானூர்தி ஓடுபாதையை புனரமைத்து வருகின்றனர். அண்மையில் மணலாற்றுப் பகுதியில் அவர்கள் மேற்கொண்ட வான் தாக்குதல் அதனையே தெரிவித்துள்ளது.
இரணைமடுவிற்கு அருகில் உள்ள வானூர்தி ஓடுபாதை தவிர அவர்கள் மேலும் மூன்று ஓடுபாதைகளை அமைத்துள்ளனர்.
2005 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் மூலம் இரணைமடுவிற்கு தென்-கிழக்காகவும், புதுக்குடியிருப்புப் பகுதியிலும் இரு வானூர்தி ஓடுபாதைகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே முல்லைத்தீவில் உள்ள ஓடுபாதையை அவர்கள் புனரமைத்து வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார். எனவே விடுதலைப் புலிகள் ஒன்றிற்கும் அதிகமான ஓடுபாதைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த காலத்தில் நடத்தப்பட்ட ஐந்து வான் தாக்குதல்களுக்கும் விடுதலைப் புலிகள் இரணைமடு வானூர்தி ஓடுபாதையையே பயன்படுத்தியிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
முல்லைத்தீவில் உள்ள ஓடுபாதை மணலாற்றுக்கு அண்மையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளிடம் ஐந்திற்கும் அதிகமான சிலின்-143 இலகு ரக வானூர்திகள் உள்ளன எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment