Thursday, 8 May 2008

தேர்தல்பிரசார நடவடிக்கைகளில் 500 துறைமுக ஊழியர்களை அரசாங்கம் ஈடுபடுத்தியுள்ளது - மங்கள சமரவீர

500 துறைமுக ஊழியர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்; தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

துறைமுக அதிகாரசபையின் 50 வாகனங்களும் கிழக்குத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிகள் என்ற பெயரில் துறைமுக அதிகாரசபையிலிருந்து மாற்றம் செய்யப்பட்ட 500 ஊழியர்களும், 50 வாகனங்களும் இவ்வாறு தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஊழியர்கள் முழுநேர மற்றும் பகுதிநேரமாக துறைமுக அதிகாரசபையில் பணியாற்றுவோர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


துறைமுகமொன்றின் ஆரம்ப நிர்மாணப் பணிகளின் போது அவசியப்படாத எழுதுவிளைஞர்கள், கணணி உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள் போன்றோரே இவ்வாறு ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் மூலம் அரசியல் நோக்கம் தெளிவாக புலனாவதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த ஊழியர்கள் பெரும்பான்மையானோர் முஸ்லிம்கள் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்காலிக பணி அடிப்படையில் 2008-04-23 முதல் 2008-06-22 வரையும், மற்றொரு குழு 2008-04-25 முதல் 2008-05-11வரையும் விடுவிக்குமாறு துறைமுக அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

தற்காலிக சேவைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் 6 பஸ்கள் காணப்படுவதகவும் துறைமுக நிர்மாணப் பணிகளுக்கு பஸ்களின் தேவை என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும், 2008-05-06ம் திகதி ஓலுவில் துறைமுகத்தின் நிர்மாணப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதற்கு சில காலங்களுக்கு முன்னரே குறித்த ஊழியர்களும், வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டமை அரசியல் பிரசார நடவடிக்கைகளை இலக்கு வைத்தே என மங்கள சமரவீர சுட்டிக்காட்டுகின்றார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: