Thursday, 8 May 2008

பர்மா மக்கள் பட்டினியால் வாடும் போது அமைச்சர் பந்துல தரகுப் பணம் பற்றி கவலைபடுகின்றார் - ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ

பர்மாவிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதன் மூலம் தமக்குக் கிடைக்கக் கூடிய தரகுப் பணம் பற்றி மட்டும் அமைச்சர் பந்துல குணவர்தன கவலைப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அண்மையில் பர்மாவைத் தாக்கிய நர்கீஸ் புயற் காற்றினால் சுமார் 20,000ற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதுடன், லட்சக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு துரித கதியில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த நிலைமையின் கீழ் பர்மாவிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படும் என்ற நுகர்வோர் விவகார அமைச்சரின் கூற்று நியாயமற்றதென தெரிவித்துள்ளார்.


இவ்வாறானதொரு அனர்த்தம் இடம்பெற்றிருக்கும் வேளையில் குறித்த நாட்டிலிருந்து எப்படியாவது அரிசி இறக்குமதி செய்யப்படும் என்று குறிப்பிடுவது அபத்தம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுனாமி அனர்த்தத்தின் போது அமைச்சர் பந்துல குணவர்தன விசேட ஹெலிகொப்டர் மூலம் தமது குடும்பத்தாருடன் பாதுகாப்பான இடத்திற்கு சென்றதாகவும், குறித்த சந்தர்ப்பத்தில் ஒரு சிறுமி தம்மையும் அழைத்துச் செல்லுமாறு கோரிய போதிலும் சிறுமியை அமைச்சர் அழைத்துச் செல்லவில்லை என பத்திரிகைகளில் வெளியான செய்தி ஞாபகத்திற்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments: