Thursday, 8 May 2008

கிழக்கு வன்முறைகளை முற்றாக நிறுத்தமுடியாது- தேர்தல் கண்காணிப்பு அமைப்பு

கிழக்கு மாகாண மக்கள் அச்சுறுத்தப்பட்டிருப்பதால் தேர்தல் வன்முறைகள் குறித்து பொலிஸாரிடமோ அல்லது தேர்தல் கண்காணிப்புக் குழுவினரிடமோ முறையிடுவதற்கு அச்சம் அடைந்திருப்பதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் கிழக்கில் வன்முறைகளை முற்றாக முடிவுக்குக்கொண்டுவருவது இயலாத காரியமென தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையத்தின் உறுப்பினர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கூறியுள்ளார்.

“வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டிய பகுதியாக கிழக்கு மாகாணம் காணப்படுகிறது. ஆயுதக் குழுவினரின் செயற்பாடுகள் காணப்படும் பகுதியென்பதால் அந்த விடயமும் கையாளப்படவேண்டியுள்ளது” என ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். 362 வாக்களிப்பு நிலையங்களில் சிலவற்றில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. போன்ற கட்சிகள் தமது பிரதிநிதிகளை அனுப்புவதற்கு அச்சமடைந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலையிலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பில் தங்கியிருப்பவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் 32 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், மூதூர், கின்னியா, வெருகல் மற்றும் சம்பூர் ஆகிய பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் எச்சரித்துள்ளது.

தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையத்தின் தகவலின் அடிப்படையில் அம்பாறையில் 36 வன்முறைச் சம்பவங்களும், மட்டக்களப்பில் 21 வன்முறைச் சம்பங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. எனினும் எல்லா முறைப்பாடுகளும் சிறிய தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பற்றியது. தெரிவுசெய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு மேலதிகமாக 49 நடமாடும் தேர்தல் கண்காணிப்பு குழுக்களை அந்த நிலையம் உருவாக்கியுள்ளது.

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான அறிக்கை தேர்தல் தினத்தன்று வெளியிடப்படுவதுடன், பிந்திய விரிவான அறிக்கை பின்னர் வெளியிடப்படுமென தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் அமைப்பு அறிவித்துள்ளது.

No comments: