Thursday, 8 May 2008

'சிறுவர்கள் இலவசமாகப் போகலாம்'; உல்லாசப் பயணத்துறை அமைச்சின் புதிய திட்டம்

இலங்கை உல்லாசப் பயணத்துறை மேம்பாட்டுப் பிரிவு, சிறீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'சிறுவர்கள் இலவசமாகப் போகலாம்' எனும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த உல்லாசப் பயணிகளை இலக்கு வைத்தே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் வயது வந்த ஒருவருடன், 12 வயதுக்குக் கீழ்ப்பட்ட சிறுவர் ஒருவர் இலவசமாக இலங்கையில் தங்கியிருக்க முடியும்.

இலங்கையின் ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாக வீழ்ச்சியடைந்திருக்கும் உல்லாசப் பயணத்துறையை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த சிறுவர்களுக்கான இலவச திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் உல்லாசப் பயணிகளின் வருகை 8.6 வீதமாக அதிகரித்திருப்பதாக உல்லாசப் பயணத்துறை அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த காலப்பகுதியில், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதந்த பயணிகளின் எண்ணிக்கை 2007 உடன் ஒப்பிடுகையில் 80.6 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: