Thursday, 8 May 2008

அதிகம் சாப்பிடுவது இந்தியர்களா... சீனர்களா.... அல்லது அமெரிக்கர்களா ?

கடந்த சில நாட்களாக உலகில் அதிகம் சாப்பிடுவது யார் ? இந்தியர்களா.... சீனர்களா.... அல்லது அமெரிக்கர்களா ? என்ற சர்ச்சை நிலவி வருகிறது. இந்தியர்களும் சீனர்களும் அதிகம் சாப்பிடுவதால் தான் உலக அளவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு, அதனால் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்து விட்டது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

அதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷோ, இந்திய நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து விட்டதால் அவர்கள் அதிகம் உணவுப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள் ( கன்ஸ்யூம் ) என்றும், அதனால் தான் உணவுப்பொருட்கள் விலை உலக அளவில் உயர்ந்து விட்டது என்றும் சொன்னார்.

இந்தியர்களின் உணவுப்பழக்கம் குறித்து இவர்கள் இருவரும் பேசிய பேச்சு பலரை முகம் சுழிக்க வைத்தது. இந்தியர்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இவர்கள் இருவரும் ( காண்டலீசா ரைஸ் மற்றும் ஜார்ஜ் புஷ் ) புள்ளிவிபரங்களை பார்த்து பேசினார்களா.. இல்லையா என்று தெரியவில்லை.


எனென்றால் ஐ.நா.,வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ( ஃபுட் அண்ட் அக்ரிகல்சரல் ஆர்கானிசேஷன் - எஃப்.ஏ.ஓ.,) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், கோதுமை, அரிசி, மக்காச்சோளம் போன்ற உணவுப்பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டது அமெரிக்காவில் தான் என்றும், இந்தியாவிலோ சீனாவிலோ அல்ல என்றும் தெரிவித்திருக் கிறது. 2006 - 07ல் இந்தியாவின் உணவு பயன்பாடு 193.1 மில்லியன் டன்களாக இருந்திருக்கிறது.

அது 2007 - 08 ல் 2.17 சதவீதம் அதிகரித்து 197.3 மில்லியன் டன்களாகி இருக்கிறது. சீனாவின் உணவு பயன்பாடு 1.8 சதவீதம் அதிகரித்து, 382.2 மில்லியன் டன்களில் இருந்து 389.1 மில்லியன் டன்களாகி இருக்கிறது. ஆனால் இதே காலகட்டத்தில் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் அமெரிக்காவின் உணவு பயன்பாடு 11.81 சதவீதம் அதிகரித்து, 277.6 மில்லியன் டன்களில் இருந்து 310.4 மில்லியன் டன்களாகி இருக்கிறது.

2007 - 08 ல் இந்தியாவில் 197.3 மில்லியன் டன் மட்டுமே உணவு பயன்படுத்தப்பட்டிருக்கும் போது, அமெரிக்காவிலோ 310.4 மில்லியன் டன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தனைக்கும் இந்திய ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கை விட குறைவாகத்தான் அமெரிக்காவில் ஜனத்தொகை இருக்கிறது.


அமெரிக்கர்கள் இந்த 310.4 மில்லியன் டன்கள் உணவையும் சாப்பிட்டு விடவில்லை என்றாலும், பயோ எரிபொருள் எடுக்க அதிக அளவில் சோளத்தை பயன்படுத்தியதாக சொல்கிறார்கள். கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 120 டாலர் வரை விலையில் விற்கப்படுவதால் சுமார் 30 மில்லியன் டன்கள் சோளத்தை அமெரிக்கா பயோ எரிபொருள் தயாரிக்க பயன்படுத்தியிருப்பதாக சொல்கிறார்கள்.


கடந்த 2000 இலிருந்து 2006 க்குள் அமெரிக்காவில், பயோ எரிபொருளுக்காக சோளத்தை பயன்படுத்தும் அளவு இரண்டரை மடங்கு அதிகரித்திருக்கிறது என்று எஃப்.ஏ.ஓ., தெரிவிக்கிறது. இன்னும் பல தகவல்களும் கூட, இந்தியாவின் உணவு பயன்பாட்டால் உலக அளவில் உணவு பற்றாக்குறை ஏற்படவில்லை என்று திட்டவட்டமாக எடுத்துரைக்கிறது.


உலக மொத்த ஜனத்தொகையில் ஆறில் ஒரு பங்கு ஜனத்தொகை இந்தியாவில் இருந்தாலும், உலக மொத்த உணவு உற்பத்தியில் 9.37 சதவீதம் தான் 2007 - 08 ல் இந்தியர்களால் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இது இதற்கு முந்தைய வருடத்தில் 9.36 சதவீதமாக இருந்தது. ஒரு வருடத்தில் 0.01 சதவீதம் தான் அதிகரித்திருக்கிறது.


உலகில் அதிகம் ஜனத்தொகையை கொண்ட சீனாவில் 2006 - 07ல் 18.53 சதவீதமாக இருந்த உணவு பயன்பாடு, 2007 - 08 ல் 18.48 சதவீதமாக குறைந்திருக்கிறது. ஆனால் வெறும் 30 கோடி ஜனத்தொகையை கொண்ட அமெரிக்காவிலோ 2006 - 07 ல் 13.46 சதவீதமாக இருந்த உணவு பயன்பாடு, 2007 - 08ல் 14.74 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இதிலிருந்து இந்தியாவிலோ சீனாவிலோ உணவுக்கான தேவை அதிகரித்திருக்கிறது என்று சொல்லதோ அதனால் தான் உலக அளவில் உணவுப்பொருட்களில் விலை உயர்ந்து விட்டது என்று சொல்வதோ தவறானது என்பது தெளிவாக தெரிகிறது.

No comments: