துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழுவினர் மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் நடத்தியுள்ள தாக்குதல் ஒன்றில் மற்றொரு துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் படுகாயமடைந்திருக்கின்றார்கள். வாழ் போன்ற கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தியே பிள்ளையான் குழுவினர் இந்தக் கொடூரமான தாக்குதலை நடத்தியதாக ஈ.பி.டி.பி. அமைப்பினர் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்கள்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இதில் வேலன் யோகராசா என்ற ஈ.பி.டி.பி. உறுப்பினரின் நிலைமை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவதனை வட்டாரங்கள் தெரிவித்தன. 29 வயதான வீரசாமி வாமதேவன், 30 வயதான துரையப்பா வடிவேல், 18 வயதான ஜெகன் சசிதரன், 32 வயதான துரையப்பா நாகமணி ஆகியோரும் வெட்டுக் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
வாழைச்சேனை பெந்தகோஸ்த் தேவாலயத்துக்கு முன்பாக இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்தே ஈ.பி.டி.பி. அமைப்பினர் மீது பிள்ளையான் குழுவினர் இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்தியிருக்கின்றார்கள். இச்சம்பவம் தொடர்பாக ஈ.பி.டி.பி. அமைப்பினர் காவல்துறையிலும் முறைப்பாடு செய்திருக்கின்றார்கள்.

No comments:
Post a Comment