Friday, 16 May 2008

6-8 வாரங்களில் மடு தேவாலயத்தை நிர்வாகத்திடம் கையளிக்க இராணுவத்தினர் இணக்கம்

மடு மாதா தேவாலயப் பகுதியில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை 6-8 வாரங்களில் அகற்றி மடு தேவாலயத்தை அதன் நிர்வாகத்திடம் கையளிப்பதற்கு இராணுவத்தினர் இணங்கியிருப்பதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் விக்டர் சோசை அடிகளார் தெரிவித்தார்.

மடு தேவாலயத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசப் மற்றும் குரு முதல்வர் விக்டர் சோசை ஆகியோர் இராணுவ உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.

மடு தேவாலயப் பகுதியில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்றி அந்தப் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு 6 முதல் 8 வாரங்கள் தேவையெனத் தெரிவித்திருக்கும் இராணுவத்தினர், கண்ணிவெடிகள் அகற்றி அந்தப் பகுதியில் திருத்தங்களை மேற்கொண்ட பின்னர் மடு தேவாலயத்தை தம்மிடம் கையளிப்பதற்கு இணங்கியிருப்பதாக குரு முதல்வர் விக்டர் சோசை அடிகளார் ஐ.என்.எல்.லங்காவிடம் தெரிவித்தார்.

“மடு தேவாலயத்தைச் சூழவுள்ள 2.5 கிலோமீற்றர் பகுதி புனித பிரதேசமாக மதிக்கப்படவேண்டும் என்பதை இராணுவத்தினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு நிர்வாகத்தை எம்மிடம் வழங்கிவிட்டு, பின்னர் அங்கிருந்து 2.5 கிலோமீற்றர் பின்னோக்கிச் செல்லத் தயார் என அவர்கள் எம்மிடம் கூறியிருந்தனர்” என்றார் விக்டர் சோசை அடிகளார்.

மடு தேவாலயத்துக்குள் குருக்களை அனுப்புவது குறித்து நாங்கள் இராணுவத்தினரிடம் கலந்துரையாடியிருந்தோம். எனினும், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்களையும் அனுமதிக்க முடியுமென இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர். மடு தேவாலயத்துக்கு குருக்கள் அனுப்பப்பட்டு தேவாலயத்தில் மேற்கொள்ளவேண்டிய திருத்த வேலைகளை மேற்கொண்டாலே மடு மாதாவின் திருச்சொரூபத்தை மீண்டும் ஆலயத்துக்குக் கொண்டுவர முடியுமென மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் விக்டர் சோசை அடிகளால் எம்மிடம் மேலும் தெரிவித்தார்.

No comments: