Tuesday, 6 May 2008

தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு நிபந்தனை! தமிழர்களுக்கே 75 சதவீத வேலை வழங்க உத்தரவு

தமிழகத்தில் புதிதாக தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு, தமிழக அரசு புதிய நிபந்தனை விதித்துள்ளது. அரசின் சலுகைகளை பெற வேண்டும் என்றால், 75 சதவீத வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்பது தான் அந்த நிபந்தனை.தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் வரிசையாக காலூன்றி வருகின்றன. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் புற்றீசல் போல் ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஐ.டி., மற்றும் பல்வேறு உற்பத்தி தொழில் துறை சார்ந்து அந்நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இளைஞர்களுக்கு முன்னுரிமை : வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்குவதற்காக, தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வாரி வழங்குகிறது. பல 100 ஏக்கர் நிலங்கள் மற்றும் ஏராளமான வரிச் சலுகைகளை தமிழக அரசு அளிக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, தொழில் முனைவோர்களை அரசு ஊக்குவிக்கிறது. ஆனால், அரசின் சலுகைகளை ருசிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், வேலை வாய்ப்பு அளிப்பதில் மட்டும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களை வஞ்சிக்கிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது.முக்கிய பதவிகளில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சொந்த நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.



கடைநிலை ஊழியர்களாக பணியாற்றும் வாய்ப்பை மட்டும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கின்றன. தமிழக அரசிடம் நிலம் மற்றும் சலுகைகளை வாரிக் குவிக்கும் நிறுவனங்கள், தமிழர்களின் உழைப்பை உறிஞ்சி, கோடி கோடி ரூபாயாக சம்பாதித்து வருகின்றன. இத்தகைய போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், வேலை வாய்ப்பு அளிப்பதில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர்.


சட்டசபையிலும் இந்த பிரச்னை நேற்று எதிரொலித்தது. சட்டசபையில் தொழில் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ராமசாமி பேசுகையில், "பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதில் தமிழர்களுக்கு முன்னுரிமை கிடைக்கச் செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தினார்.


இந்நிலையில், பிரச்னையை உணர்ந்த தமிழக அரசு, தமிழகத்தில் புதிதாக தொழில் துவங்க முன் வரும் நிறுவனங்களுக்கு புதிய நிபந்தனை விதித்துள்ளது. அரசின் சலுகைகளைப் பெற வேண்டும் என்றால், தமிழர்களுக்கே 75 சதவீத வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


உற்பத்தி துறையில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு, தமிழக அரசு உறுதி எடுத்துள்ளது. இதற்கு வலு சேர்க்கும் வகையில், முதலீட்டளவை கணக்கில் கொள்ளாமல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் தவிர்த்து, இதர மாவட்டங்களில் 750 பேருக்கு மேல் வேலை அளிக்கும் ஒவ்வொரு பெரும் தொழிலுக்கும் சிறப்பு சலுகைகள் அளிக்கப்படும்.


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொழில் துவங்கும் நிறுவனங்கள், ஆயிரத்து 500 பேருக்கு மேல் வேலை வாய்ப்பு அளித்தால், இந்த தொகுப்புச் சலுகை அளிக்கப்படும். இந்த சலுகைகளை பெற வேண்டும் என்றால், குறைந்தபட்சம் 75 சதவீத வேலைகளை தமிழர்களுக்கே வழங்க வேண்டும்.


மேலும், தற்போது வழங்கப்படும் முதலீடு அடிப்படையிலான தொகுப்புச் சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான நிபந்தனைகளை தொழில் நிறுவனங்கள் நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்காக, உயர்நிலை அலுவலர் குழு ஒன்று அமைக்கப்படும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைத் தவிர்த்து, பிற மாவட்டங்களில் தொழில் துவக்கினால் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பால், தொழில் துறையின் பின் தங்கியுள்ள பிற மாவட்டங்கள் பயன் பெறக்கூடிய நிலையை எட்டியுள்ளது.


வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தர்மபுரி போன்ற மாவட்டங்களில் சொல்லும்படி பெரிய தொழில் நிறுவனங்கள் எதுவும் கிடையாது. அரசின் அறிவிப்பால், மேற்கண்ட மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் அமைந்தால், அம்மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.



No comments: