Saturday, 3 May 2008

சிறையில் எம்.எல்.ஏ. பதவி ஏற்கிறார் மலேசிய தமிழர் மனோகரன்

சிறையிலிருந்தே தேர்தலில் போட்டியிட்டு வென்ற மலேசியத் தமிழர் மனோகரன், சிறையிலேயே எம்.எல்.ஏ. வாக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிந்து உரிமை நடவடிக்கைப் படையின் (ஹிந்த்ராப்) சட்ட ஆலோசகரான இவர், தமிழர்கள் மலேசிய அரசால் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து போராட்டம் நடத்தினார். அவர் உள்பட 5 பேர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டனர். விசாரணையின்றி 6 மாதங்களாக அவர்கள் சிறையில் இருக்கின்றனர்.

சிறையில் இருந்தே தேர்தலில் போட்டியிட்ட மனோகரன், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்றும் சிறையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறி வந்தார். இந்நிலையில் சிலாங்கூர் மாகாண சட்டப்பேரவைத் தலைவர் டெங் சாங் கிங்குக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார் மனோகரன்.

சிறைக்கு வந்து தனக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு பேரவைத் தலைவரை மனோகரன் கோரியுள்ளார். மே 8-ம் தேதி அவர் பதவி ஏற்பார் என்று தெரிகிறது. உள்நாட்டு பாதுகாப்பு சட்டப்படி கைதாகி சிறையில் வாடும் தனது கணவர் உள்பட 80 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று மனோகரனின் மனைவி புஷ்பநீலா, மலேசிய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். மலேசியாவின் மக்கள் தொகை 2 கோடியே 70 லட்சம். இதில் 8 சதவீதத்தினர் இந்திய வம்சாவழியினர். அவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

No comments: