Saturday, 3 May 2008

இனி வசந்த காலம் : வைகோ நம்பிக்கை

சென்னை : "இலங்கைத் தமிழர்களுக்கு உணவும், மருந்துப் பொருட்களும் அனுப்ப தடையாக இருந்தது யார்?' என ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ ஆவேசமாக கேள்வி எழுப்பினார். சென்னை அடுத்த ஆவடியில் மே தினத்தை ஒட்டி ம.தி.மு.க., அங்கமான மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி சார்பில் மாநாடு நடந்தது. இதில், கட்சியின் பொதுச் செயலர் வைகோ பேசியதாவது: தமிழகத்தில் 1967ம் ஆண்டு முதல்வராக இருந்த அண்ணாதுரை, கோவை வ.உ.சி., பூங்காவில் நடத்திய அரசு விழாவில் மே தின விடுமுறை அறிவித்தார். அதை மறைத்து விட்டு முதல்வர் கருணாநிதி ஏதேதோ சாதனைகள் குறித்து தனது மே தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஒகேனக்கல் பிரச்னையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தமிழர்களின் உரிமையை விட்டு கொடுத்து பச்சை துரோகம் செய்துள்ளார். இலங்கையில் இரண்டாண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் உண்ண உணவின்றி, நோய்க்கு மருந்தின்றி வாடி உயிரிழந்து வருகின்றனர். அதற்காக நான் பிரதமரிடம் நேரில் வலியுறுத்தி, செஞ்சிலுவை சங்கம் மூலமாகசேகரித்து வைத்துள்ள உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இலங்கை தமிழர்களுக்கு அனுப்பக் கோரினேன். உடனே அவரும் தனது செயலரை அழைத்து, உத்தரவுகளை பிறப்பித்தார்.

No comments: