Sunday, 11 May 2008

வன்முறைகளுடன் கூடிய தேர்தல் முடிவுகளை நிராகரிக்கின்றோம்- ஐக்கிய தேசியக் கட்சி

பாரிய தேர்தல் வன்முறைச் சம்பவங்களுடன் நடைபெற்று முடிவடைந்திருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 90 வீதமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

நேற்று நடைபெற்றுமுடிந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களில் கள்ளவாக்குப் பதிவுகள் இடம்பெற்றிருப்பதுடன், வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்டு, வாக்காளர்கள் வாக்களிக்கவிடாமல் திருப்பியனுப்பப்பட்ட சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன. வாக்காளர்கள் எவரும் அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை. அரசாங்கம் மக்களின் வாக்குகளைப் பறித்துக் கொண்டுள்ளது என அவர் குற்றஞ்சாட்டினார்.

திருக்கோவில் பகுதியில் உள்ள 17 வாக்களிப்பு நிலையங்களிலும் கள்ளவாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் அனைத்தும் வன்முறைகள் இடம்பெற்றிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் கூறினார்.

சட்டநடவடிக்கை எடுப்பதுபற்றி ஆராய்ந்து வருகிறோம்- கிரியல்ல

சட்டவிதோரதமான முறையில் இடம்பெற்று முடிவடைந்திருக்கும் தேர்தல் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தவிருப்பதுடன், தேர்தல் வன்முறைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயவிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல கூறினார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் கூடிஆராய்ந்து, சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றித் தீர்மானம் எடுக்கப்படும். தேர்தல் வன்முறைகள் குறித்து எழுத்தமூலமான அறிக்கையொன்றை தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸ்ஸாநாயக்கவிடம் கையளிப்பதற்கும் ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

No comments: