தமிழ் மக்கள் கொழும்பிலிருந்து வெளியேற்றப்படமாட்டார்கள் என சட்டமா அதிபர் வழங்கிய உறுதிமொழியைத் தொடர்ந்து, தமிழர்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனுமீதான விசாரணை முடிவுக்கு வந்தது.
கடந்த வருடம் ஜூன் மாதம் 7ஆம் திகதி கொழும்பில் தற்காலிக விடுதிகளில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் பாதுகாப்புப் படையினரால் பலவந்தமாக வவுனியா மற்றும் திருகோணமலை நகரங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
இந்த நடவடிக்கைக்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்பட்டு அதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம், வவுனியா மற்றும் திருகோணமலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட தமிழர்கள் மீண்டும் கொழும்பிற்கு அழைத்துவரப்பட வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் பாதுகாப்புத் தரப்பினரின் நடவடிக்கைக்கு எதிராக மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தது. எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபடக்கூடாதென உயர்நீதிமன்றம் பொலிஸ்மா அதிபருக்கும் உத்தரவிட்டிருந்தது.
நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த வழக்கு மீதான மற்றுமொரு விசாரணையில், தமிழ் மக்கள் கொழும்பிலிருந்து வெளியேற்றப்படவோ அல்லது அவர்கள் கொழும்பின் எந்தப் பகுதிகளிலும் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்படுவதோ இடம்பெறாதென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் சார்பில் சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார். இதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட வழக்கு முடிவுக்குக்கொண்டுவரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment