ஜனநாயகத்தை ஏற்படுத்தினால் அதன்மூலம் தனது இருப்பு இல்லாமல்போய்விடுமென்ற அச்சம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இருப்பதாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனால்தான் ஜனநாயத்தை ஏற்படுத்தும் நோக்கமின்றி கிழக்கு மாகாணசபையில் ஆயுதக் குழுவினரின் ஆயுதங்களைக் களையாமல் விட்டுவைத்திருப்பதாக இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அநுரகுமார திஸ்ஸாநாயக்க தெரிவித்தார்.
ஜனநாயகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் குழுவினர் ஆயுதங்களுடன் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளது. பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதாகக் கூறிக்கொண்டு பிறிதொரு பயங்கரவாத அமைப்பையே அரசாங்கம் உருவாக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
கருணா குழுவினரின் ஆயுதங்களை அரசாங்கம் களையாமலிருப்பதற்கான காரணம் என்ன? என்று கேள்வியெழுப்பியிருக்கும் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர், விடுதலைப் புலிகளிடமிருந்து கருணா குழுவினருக்கு அச்சுறுத்தல் இருந்தால் அரசாங்க பாதுகாப்புத் தரப்பினரின் பாதுகாப்பை வழங்க முடியுமெனவும், தேர்தல் பிரசாரப்பணிகளுக்காக கிழக்கிற்குச் சென்றிருக்கும் 50 அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் 300-400 பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்தி கருணா குழுவினருக்குப் பாதுகாப்பு வழங்கமுடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவசர அவசரமாக கிழக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்தவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை. கிழக்கில் அபிவிருத்திகளை மேற்கொண்டவிட்டு, கருணா குழுவினரின் ஆயுதங்களைக் களைந்துவிட்டு பின்னர் அங்கு தேர்தல்களை நடத்தியிருக்க முடியுமென ஜே.வி.பி. மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment