Tuesday, 6 May 2008

ஊடகங்கள் தொடர்பான பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கருத்தை சுதந்திர ஊடக இயக்கம் கண்டித்துள்ளது

பாதுகாப்புத் தரப்பினரை குறைத்து மதிப்பிடும் வகையில் தகவல்களை வெளியிடும் சுதந்திரமான ஊடகங்களைத் தடைசெய்துவிடப்போவதாக அரசாங்க ஊடகமொன்றுக்கு வழங்கியிருந்த செவ்வியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கூறியிருந்த கருத்தை சுதந்திர ஊடக இயக்கம் கண்டித்துள்ளது.

ஊடகங்கள் மீது தணிக்கை கொண்டுவரப்படவிருப்பதுடன், குற்றவியல் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென கடந்த ஜனவரி மாதம் கோத்தபாய ராஜபக்ஷ கூறியிருந்தமையையும் சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

“பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கருத்தை சுதந்திர ஊடக இயக்கம் கண்டிக்கிறது. ஊடகத்தணிக்கை மற்றும் மாற்றுக்கருத்துடையவர்களை மௌனமாக்குவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் இலங்கையில் ஊடக சுதந்திரத்தைப் பாதிப்படையச் செய்யும்” என சுதந்திர ஊடக இயக்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து அரசாங்கம் விளக்கமளிப்பதுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடைய கருத்துக்கள் குறித்து பதில்கூறவேண்டும். “இலங்கையில் சுதந்திரமான ஊடகங்கள் அழுத்தங்களுக்கு முகம்கொடுக்கவேண்டியுள்ளன. இந்த அழுத்தங்களால் ஊடகத்துறையின் அடிப்படைத் தன்மையான துல்லியத்தன்மை, பக்கச்சார்பின்மை போன்றவற்றை நிறைவேற்றமுடியாத நிலையில் ஊடகவியலாளர்கள் உள்ளனர். இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில் தென்பகுதியில் அரசாங்கத்திடமிருந்தே கூடுதல் அழுத்தங்கள் வருகின்றன” என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

No comments: