* மனித உரிமை மீறல்கள், அதிகாரிகளின் பலவீனமே காரணம் என்கிறது ஐ.தே.க. ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடுகளின் காரணமாக பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தானிடமே ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கான போட்டியில் இலங்கை தோற்றிருப்பதாக சுட்டிக் காட்டியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, சர்வதேச சமூகம் பாகிஸ்தானை நம்புமளவிற்கு கூட இலங்கையின் மீது நம்பிக்கை வைக்கவில்லையென்பது இதன் மூலம் புலனாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஐ.தே.க.வின் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; தனது குறைபாடுகளையும் பலவீனங்களையும் மறைத்துக்கொள்வதற்காக ஐ.தே.க.வை குறை கூறும் பழக்கத்தை மீண்டும் வெளிக் காட்டி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவத்துக்கான வாக்கெடுப்பில் தோற்றுப் போனதற்கான காரணத்தையும் ஐ.தே.க. மீது சுமத்தி விட அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயக விரோத செயல்கள் காரணமாக பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தானிடமே நாம் இம்முறை தோல்வியுற்றிருக்கிறோம். சர்வதேச சமூகம் பாகிஸ்தானில் வைத்த நம்பிக்கையைக் கூட இலங்கை மீது வைக்கவில்லை என்பது இதிலிருந்து புலனாகிறது. இந்த வாக்கெடுப்புக்காக அரசாங்கம் தனது முழுப் பலத்தை பயன்படுத்தியதுடன் ரோஹித போகொல்லாகம, மகிந்த சமரசிங்க, கரு ஜயசூரிய, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், மிலிந்த மொரகொட ஆகிய அமைச்சர்களை இந்தப் பணியில் இறக்கி விட்டிருந்தது. அதேபோல் பாலித கோஹண, தயான் ஜயதிலக தலைமையிலான வெளிநாட்டலுவல்கள் அதிகாரிகள் பலரும் கூட இந்த வாக்கெடுப்பு அலுவல்களுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவற்றுக்கெல்லாம் மத்தியிலும் அரசாங்கத்துக்கு வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் அதிகாரிகளின் பலவீனங்கள் காரணமாக நாம் தற்போது பாகிஸ்தானிலும் பார்க்க கீழ் மட்டத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இவ்வாறானதொரு நிலைமையில் இலங்கை மீது உண்மையான கரிசனையும் நேசமும் இருக்குமெனில் அரசாங்கம் சரியான பாதையொன்றுக்குப் பிரவேசித்து இந்த அபகீர்த்தி நிலையிலிருந்து இலங்கையை மீட்டெடுக்கவே செயற்பட வேண்டும். எனினும், அரசாங்கமோ ஐ.தே.க.வை தூற்றி அதில் அரசியல் இலாபம் பெற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஐ.தே.க. எப்போதுமே இலங்கையின் எதிர் காலத்துக்கும் அதன் மக்களின் மனித உரிமைகளுக்குமே முன்னின்று செயற்பட்டு வருகிறது. எனவே, நாட்டின் மீது உண்மையான அக்கறை இருப்பின் ஏனையவர்களைக் குறை கூறிக் கொண்டிராமல் இப்போதாவது சரியானதும் ஆரேக்கியமானதுமான பாதைக்குப் பிரவேசிக்குமாறு நாம் அரசிடம் கேட்டுக் கொள்கிறோம்.
Monday, 26 May 2008
பாகிஸ்தானை நம்பும் சர்வதேசம் இலங்கையை நம்பமறுப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment