போலி ஆவணங்களை சமர்ப்பித்து ஆறு சிறுமிகளை சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப் பெண்களாக அனுப்ப எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு எனக் கூறி சிறுவர்களை கடத்தும் இம்முயற்சியை, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் இணைந்து முறியடித்துள்ளன. வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் நலன்புரி சேவைகளுக்கான பிரதி பொது முகாமையாளர் கல்யாணி ஹேரத் இதுபற்றி தகவல் தருகையில்; இச்சிறுவர்கள் வயதில் மிகவும் இளையவர்கள் என்பது தெட்டத் தெளிவான விடயம். அவர்களது உண்மையான வயதை கேட்டறிந்தவுடனேயே அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இச்சிறுவர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இப்பிள்ளைகளின் பெற்றோர் வேலை வாய்ப்பின்மை காரணமாகவோ அன்றி, வாழ்வதற்கான குறைந்தபட்ச வருமானத்திற்காகவோ இச்சிறுவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப முயற்சித்துள்ளனர். இவர்களில் சில சிறுவர்கள் வறுமையிலும் ஒருவேளை உணவுக்காகவும் தமது குடும்பத்தினருக்கு உதவுவதற்காக வெளிநாடு சென்று வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் எனத் தெரிவித்தார். வெளிநாட்டு உறவுகள் மற்றும் ஆலோ சனைகளுக்கான பிரதி பொதுமுகாமையாளர் எல்.கே.ருகுனகே இதுபற்றி தெரிவிக்கையில்; எந்தத் தொழில் அனுபவமும் இல்லாத இந்த குறைந்த வயது சிறுவர்களை வெளிநாட்டுக்கு வேலைக்காக அனுப்பும் இந்த மோசமான நிலைமைகளை நாம் கவனத்தில் கொண்டுள்ளோம். றிஷாணா நபீத்தின் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அவர்பற்றிய உரிய ஆவணங்களை கோரியுள்ளோம். போலி ஆவணங்களை தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள முகவர்களை இனங்காண்பதற்கான தேடுதல் முயற்சிகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை முன்னெடுத்துள்ளது. இச்சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இவர்கள் எத்தகைய நோக்கங்களுக்காக பாவிக்கப்பட்டனர் என்ற விபரம் தெரியவந்துள்ளது. இவ்வாறான துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கெதிராக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் இணைந்து எதிர்வரும் ஜூன் 9 ஆம் திகதி இது தொடர்பான சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளன. இச்சந்திப்பில் சிறுவர் விவகாரம் குறித்து ஆராயப்படவிருப்பதுடன் சில தீர்மானங்களும் எடுக்கப்படவுள்ளன. மிக மோசமாக பாதிக்கப்பட்ட பின்தங்கிய கிராமப் பிரதேசங்களில் இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோகத்தினை இனங்காண்பதற்கும் இவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் கிராம மட்டத்திலான விழிப்புக் குழுக்களை நிறுவ அதிகார சபை ஏற்பாடுகளை செய்துள்ளது. அடிமட்ட மக்கள் மத்தியில் இதற்கான விழிப்புணர்வினை மக்கள் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்தும் வகையில், கிராம சேவையாளர்களின் ஒத்துழைப்புடன் இப்பணிகள் முன்னெடுக்கப்படும். சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் முன்னாள் தலைவரான பேராசிரியர், நரேந்திர டீ சில்வா இதுபற்றி தெரிவிக்கையில், வயது குறைந்த சிறுவர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்காக அனுப்புவது அண்மைய காலங்களில் அதிகரித்துள்ளது. இந்த நிலைமைகளை நிர்ப்பந்திக்கும் காரணிகளை கண்டறிந்து தீர்வை முன்வைப்பது அவசியமானது எனத் தெரிவித்தார்.
Monday, 26 May 2008
வீட்டுப் பணிப் பெண்களாக கிழக்கு மாகாண சிறுமிகளை வெளிநாட்டுக்கு அனுப்பும் முயற்சி முறியடிப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment