Saturday, 10 May 2008

அடிப்படை சுகாதார வசதிகள் அற்ற நிலையில் மீளக்குடியமர்த்தப்பட்ட அல்லைப்பிட்டி மக்கள்


யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் அண்மையில் அங்கு மீண்டும் மீளக்குடியமர்த்தப்பட்டிருந்தனர்.

இவ்வாறு மீளக்குடியமர்த்தப்பட்டவர்களில் 55 பேர் இனந்தெரியாத தொற்றுக்காய்ச்சல் நோயொன்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்தளிப்பதற்கு அல்லைப்பிட்டியில் அடிப்படை சுகாதார வசதிகளோ, வைத்தியர்களோ இல்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

தோற்றுக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அரசாங்க அதிபரின் அனுமதியைப் பெற்று வேலணையிலிருந்து வைத்தியர்கள் அல்லைப்பிட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அடிப்படை சுகாதார வசதிகள் கூட இல்லாதநிலையில் மக்கள் குடியமர்த்தப்பட்டிருப்பதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ் போதனா வைத்தியசாலை உட்பட குடாநாட்டின் அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களில் மருந்துகளுக்குப் பாரிய தட்டுப்பாடு நிலவிவருவதாக குடநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. பனடோல் கூட இல்லையென குடாநாட்டு மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

No comments: