நிலத்திற்குள்ளிருந்து வாயு வெளியேறியதை தற்செயலாக கண்டுகொண்டதனையடுத்து எண்ணெய் அகழ்வாராய்ச்சிப் பணியை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சிலாபம் முன்னேஸ்வரம் கோவிலுக்கு சமீபமாக வாயு வெளியேற்றம் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதையடுத்தே எண்ணெய் வேட்டை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. மன்னார் குடா கடலுடன் இணைந்த நீரோட்டப் பகுதியிலேயே சிலாபமும் உள்ளது.
மன்னார் குடாவிலேயே எண்ணெய் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவிருந்தன. இந்நிலையில் சிலாபப் பகுதியில் வாயு வெளியேற்றத்தை கண்டறிந்தபின் அங்கு எண்ணெய் வளம் இருக்கின்றதா என்பது குறித்து ஆராய்வதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளுக்கு எகிப்திடமிருந்து தொழில்நுட்ப ஆதரவு பெறப்பட்டிருப்பதாக அமைச்சர் பௌசி கூறினார்.
ஹசிலாபத்தின் கரைப் பகுதியில் பெற்றோலிய வளம் இருப்பதற்கான அறிகுறிகளை நாம் கண்டறிந்துள்ளோம். அதனையடுத்து எகிப்திடமிருந்து உதவி கோரிப் பெற்றிருக்கிறோம்' என்றும் பௌசி கூறியுள்ளார்.
எகிப்து 3 தொழில்நுட்ப நிபுணர்களை சிலாபம் பகுதிக்கு அனுப்பியிருக்கிறது. எகிப்தின் எண்ணெய் வளத்துறை அமைச்சைச் சேர்ந்த இந்த நிபுணர்கள் சிலாபம் பகுதிக்குச் சென்று எண்ணெய் ஆய்வு ஆரம்பக்கட்டப் பணிகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.
அடுத்த ஓரிரு வாரங்களில் பணிகளை எவ்வாறு ஆரம்பிப்பது என்பது தொடர்பாக அவர்கள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க உள்ளதாக பௌசி கூறினார்.
தற்செயலான வாயு வெளியேற்றமானது பெற்றோலிய வளமிருப்பதற்கான அறிகுறியா என்பதைக் கண்டறிய அதிகளவிலான ஆய்வுகள் தேவைப்படுவதாக வருகை தந்துள்ள எகிப்திய நிபுணர்களில் ஒருவரான ஹனி நாசர் என்பவர் கூறினார்.
மன்னார் குடாவையொத்த நிலவமைப்பே காணப்படுவது நம்பிக்கையை ஏற்படுத்தும் விடயமாகத் தோன்றுகின்றதெனவும் தனது பக்கத்தில் இந்தியா ஏற்கனவே எண்ணெய், வாயு அகழ்வுப் பணியை மேற்கொண்டிருப்பதாகவும் நாசர் தெரிவித்தார்.
ஆரம்பக் கட்ட அறிகுறிகள் சாதகமாக இருக்கின்றன என்றும் இலங்கையின் எண்ணெய் அகழ்வாய்புப் பணிக்கு உதவுவதில் எகிப்து மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்தார். அதேசமயம், நிலத்தின் கீழான நீர்த்தேக்கத்திலிருந்தும் வாயு வெளியேற்றத்துக்கான சாத்தியம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2007 நவம்பரில் 50 அடி ஆழத்தில் குழாய்க்கிணறை சிலாபம் பகுதிவாசிகள் தோண்டியபோது வாயு வெளியேற்றம் கண்டறியப்பட்டதாக பெற்றோலிய வள அபிவிருத்தி செயலகத்தின் தலைவரான நீல் டி சில்வா தெரிவித்தார்.
நீரூடாக வெளியேறிய வாயுக் குழாய் மூலம் வெளியே வந்ததாகவும் 5 மாதங்களாக அந்த வாயு எரிந்துகொண்டிருந்ததாகவும் அவர் கூறியதுடன் அந்த வாயு மெதேன் ரகத்தைச் சேர்ந்ததெனவும் அவர் குறிப்பிட்டார். மெதேன் வாயு இருக்கும் பகுதிகளில் பெற்றோலிய வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதலால் இது உற்சாகமளிக்கும் அறிகுறி என்றும் நீல் டி சில்வா கூறினார்.
Saturday, 10 May 2008
முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு சமீபமாக வாயு வெளியேற்றத்தையடுத்து எண்ணெய் ஆராச்சியில் சிங்கள அரசு தீவிரம்!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment