Saturday, 24 May 2008

இலங்கைக்கு மட்டுமல்ல புலிகளுக்கும் சீனாவிடமிருந்துதான் ஆயுதங்களாம்! ஜேன்ஸ் புலனாய்வு மஞ்சரி திடுக்கிடும் தகவல்





இலங்கையில் தொடரும் மோதல்களில் சீனாவின் ஆயுதங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன எனத் தெரிவித்துள்ள உலகின் முன்னணிப் புலனாய்வுச் சஞ்சிகையான "ஜேன்ஸ் ன்ரெலிஜன்ஸ் ரிவியூ' இலங்கை அரசும் விடுதலைப் புலிகள் அமைப்பும் சீனாவிடமிருந்துதான் ஆயுதங்களைப் பெறுகின்றன



எனத் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் உட்படப் பல அமைப்புகளுக்குப் பழைய மற்றும் புதிய வகை சிறிய ரக ஆயுதங்களை சீனாவே முக்கியமாக வழங்குவதாகவும் ஜேன்ஸ் புலனாய்வுச் சஞ்சிகை தெரிவித்துள்ளது.

உறுதிப்படுத்தப்படாத புலனாய்வுத் தகவலாகவே இதுவரை இருந்து வந்த இந்த விடயம் இப்போது வெளிப்படையாகியுள்ளதாகவும் ஜேன்ஸ் சஞ்சிகை தனது மே மாத இதழில் தெரிவித்துள்ளது.

நவீன 5.56 எம்.எம்., கியூ. பி.இஸட் 95 ரகத் துப்பாக்கிகள் உட்பட சீனாவில் தயாரிக்கப்பட்ட நவீன தாக்குதல் ஆயுதங்கள் விடுதலைப் புலிகளிடம் காணப்படுவது அவர்களது இணையத்தளங்களில் வெளியாகியுள்ள


எம்.எம்.5.56

புகைப்படங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவை இலங்கை இராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்டவை என விடுதலைப் புலிகள் தெரிவிக்க முடியாது.

விடுதலைப் புலிகள் சீனாவிலிருந்து சிறிய ரக ஆயுதங்களை மாத்திரமல்ல, மோட்டார்கள் மற்றும் பீரங்கிகளுக்குத் தேவையான வெடிகுண்டுகளையும் பெறுகின்றனர்.

இலங்கை இராணுவத்திற்கும் சீனா பெரிய அளவில் சிறியரக ஆயுதங்களை வழங்கும் முக்கிய நாடாகவுள்ளமையே கவலைக்குரியது என்றும் ஜேன்ஸ் தெரிவித்துள்ளது.

சீனா அரசிற்குச் சொந்தமான "நொரிங்கோ பொலி டெக்னோலஜி நிறுவனம்' இலங்கைக்கு ஆயுதத் தளபாடங்களை விற்பனை செய்து வருகின்றது.

குறிப்பிட்ட நிறுவனத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களுக்கான பெறுமதியை இலங்கை அரசு உரிய காலத்தில் செலுத்தத் தவறியதால் அந்த நாட்டிற்கு அனுப்பப்படவிருந்த 225 கொள்கலன் தொகுதி ஆயுதங்களையும் சீனா தடுத்து வைத்திருந்ததாகவும் ஜேன்ஸ் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் சீனாவிற்குச் சென்று இது குறித்து சீன அரசுடன் நேரடியாகப் பேச்சுகளை மேற்கொண்ட பின்னரே அந்தக் கொள்கலன்கள் இலங்கைக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.

இலங்கை அரசுக்கு இவ்வாறு பணம் செலுத்துவதற்குப் பிரச்சினைகள் இருக்கலாம்.

ஆனால் புலிகளுக்கு அத்தகைய பிரச்சினைகள் இல்லை.

ஏனெனில் சீனாவில் தங்களுக்கு ஆயுதங்களை விநியோகிப்போருக்குப் புலிகள் கறுப்புச் சந்தையில் பணத்தைக் கொடுத்து விடுகின்றார்கள்.

இந்த விடயத்தில் சீன அதிகார வர்க்கத்தின் நிலைப்பாடு குறித்து நிபுணர்கள் மத்தியில் வித்தியாசமான கருத்து நிலைப்பாடு காணப்படுகின்றது.

கறுப்புச் சந்தை ஊடாகவே சீன ஆயுதங்கள் கிளர்ச்சியாளர்களின் கைகளைச் சென்றடைகின்றன எனச் சிலர் கருதுகின்றார்கள்.

ஆனால் ஏனையோரோ, சீனா தனது பகிரங்கப்படுத்தப்பட்ட வெளிநாட்டுக் கொள்கைக்கு மாறான விதத்தில் மறைமுகமான ஆயுத விற்பனைக்கு இடமளிக்கும் ஓர் அரசல் புரசல் நடைமுறையைப் பின்பற்றுவதாகக் காண்கின்றனர்.

இப்படி அந்தச் சஞ்சிகை மேலும் தெரிவித்துள்ளது.

No comments: