ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் சிறிலங்கா உறுப்புரிமை இழந்தமையானது ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றியாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. |
நியூயோர்க்கை தலைமையிடமாகக்கொண்டு செயற்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சிறிலங்காவுக்கான அங்கத்துவம் மறுக்கப்பட்டதன் ஊடாக மனித உரிமைகள் சபை சிறந்த தரத்தை எட்டியுள்ளது. இலங்கையில் மனித உரிமைகளினால் பாதிக்கப்பட்டோருக்கும், மனித உரிமைகள் பேரவைக்கும் கிடைக்கப்பெற்ற பாரிய வெற்றியாக உள்நாட்டு- வெளிநாட்டு மனித உரிமைகள் ஆர்வலர்கள் சிறிலங்காவின் தோல்வியை கருதுகின்றனர். 47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைகள் சபையில் 15 ஆசனங்கள் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படும். ஆசியப் பிராந்தியத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 4 ஆசனங்களுக்கு 6 நாடுகள் போட்டியிட்டன. ஜப்பான் 155 வாக்குகளுடனும் தென் கொரியா 139 வாக்குகளுடனும் பாகிஸ்தான் 114 வாக்குகளுடனும் பாஹ்ரெய்ன் 142 வாக்குகளுடனும் ஆசியப் பிராந்திய நாடுகளுக்கான 4 ஆசனங்களையும் வெற்றி கொண்டன. வாக்கெடுப்பில் போட்டியிட்ட சிறிலங்கா 101 வாக்குகளையும் கிழக்குத் திமோர் 92 வாக்குகளையும் மட்டுமே பெற்றன. சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் உயர்ந்த தரத்தில் மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று 2006 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட புதிய மனித உரிமைகள் சபையின் தொடக்க உறுப்புரிமை நாடுகளில் சிறிலங்காவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இம்முறை நடைபெற்ற வாக்கெடுப்பில் வெற்றிபெற சிறிலங்கா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டது. அங்கத்துவ உறுப்புரிமையை மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு பயன்படுத்தாது, மனித உரிமை மீறல்களுக்கு எதிரான முறைப்பாடுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முயற்சித்த நாடான சிறிலங்காவின் அங்கத்துவம் நிராகரிக்கப்பட்டமை பாராட்டுக்குரியது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்திய பேச்சாளர் ரீவ் ச்ருசோவ் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு சிறிலங்கா, கடந்த ஆண்டு பெலாரஸ் ஆகிய நாடுகளின் உறுப்புரிமை மறுக்கப்பட்டதன் மூலம் மனித உரிமைகளை மீறும் நாடுகளுக்கு நல்லதோர் பாடம் கற்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் கிடைக்கப்பெற்ற அங்கத்துவத்தை பயன்படுத்தி பல்வேறு மனித உரிமை மீறல்களை சிறிலங்கா அரசாங்கம் வலிந்து மேற்கொண்டுள்ளதாக அரச சார்பற்ற அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன. தண்டனைகள் மற்றும் விமர்சனங்களில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கான ஓர் பாதுகாப்புக் கவசமாக தனது உறுப்புரிமையை சிறிலங்கா பயன்படுத்தியதாக அவை குற்றம் சாட்டுகின்றன. ஆட்கடத்தல், படுகொலைகள், காணாமல் போதல், சித்திரவதைகள் போன்ற சம்பவங்கள் குறித்த விசாரணைகளின் போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை என்று அனைத்துலக நாடுகளைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் குற்றம் சாட்டியிருந்தன. தென் ஆபிரிக்காவின் டெஸ்மன் டுட்டு, ஆர்ஜென்டீனாவின் அடொல்ப் இஸ்குவில் மற்றும் அமெரிக்காவின் ஜிம்மி காட்டர் ஆகிய நோபல் சமாதான விருதாளர்கள் மனித உரிமைகள் சபையில் சிறிலங்காவுக்கான அங்கத்துவம் வழங்கப்படக்கூடாது என்று கோரிக்கை விடுத்திருந்தனர். அரச சார்பற்ற நிறுவனங்களின் எதிர்ப்பு காரணமாக 2007 ஆம் ஆண்டு பெலராஸ் அரசாங்கத்தின் உறுப்புரிமை வெற்றிகரமாக நீக்கப்பட்டது. மனித உரிமைகள் சபையில் இருந்து சிறிலங்கா நீக்கப்பட்டமையின் மூலம் பல்வேறு சித்திரவதைகள் மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கிடைத்துள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திட்ட இணைப்பு அதிகாரி மைக்கல் அன்ரனி தெரிவித்துள்ளார். இத்தோல்வியின் மூலம் வலுவான செய்தி ஒன்று சிறிலங்கா அரசாங்கத்திற்கு விடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த வாக்கெடுப்பு முடிவு சிறிலங்கா தொடர்பாக அனைத்துலக சமூகத்தில் புதிய பேச்சுவார்த்தைகள் உருவாக வழிகோலும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சிறிலங்கா அரசாங்கமும், அதன் படைத்தரப்பும் மேற்கொள்ளும் மனித உரிமை அட்டூழியங்கள் நிறுத்தப்பட்டு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கண்காணிப்பாளாளனின் உதவியைப் பெற்றுக்கொள்ள இந்த வாக்கெடுப்பு வாய்ப்பாக அமையும் என்றும் மைக்கல் அன்ரனி குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரும் பாரியளவிலான மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், பொதுமக்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் கட்டவிழ்த்து விடப்படும் உரிமை மீறல்கள் இதனால் நியாயப்படுத்தப்பட முடியாது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் நிறுவப்படுதவன் மூலம் நாட்டு மக்கள் இருதரப்பினாலும் மேற்கொள்ளப்படும் மனித உரிமை சம்பவங்களிலிருந்து பாதுகாப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் பேரவைக்கான ஐந்து பிராந்தியங்களில் ஏனைய இரண்டு பிராந்திய ஆசனங்களுக்கு போட்டி நிலவியது. மேற்கு ஐரோப்பிய பிராந்தியத்திற்கு ஒதுக்கப்பட்ட இரண்டு ஆசனங்களை ஐக்கிய இராச்சியமும், பிரான்சும் கைப்பற்றின. கிழக்குப் ஐரோப்பிய பிராந்தியத்திற்கான ஆசனங்களை ஸ்லோவாக்கியா மற்றும் உக்ரேய்ன் ஆகிய நாடுகள் கைப்பற்றின. அனைத்துப் பிராந்திய நாடுகளுக்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே எமது விருப்பம் என்று ஆபிரிக்க ஜனநாயக அமைப்பைச் சேர்ந்த பிரான்க் கமுங்கா தெரிவித்துள்ளார். எவ்வாறு எனினும், இம்முறை தெரிவு செய்யப்பட்ட அனைத்து நாடுகளும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பில் காத்திரமான பங்களிப்பாற்ற வேண்டியது இன்றியமையாததாக அமைந்துள்ளது. புதிய அங்கத்துவ நாடுகள் அரசியல் மற்றும் வேறு காரணிகளை புறம் தள்ளி மனித உரிமைகளினால் பாதிக்கப்படுவோரை பாதுகாப்பதற்கு அதிக முனைப்பு காட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் மற்றும் பாஹ்ரெய்ன் ஆகிய நாடுகளில் மனித உரிமை விவகாரங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என வினைத்திறனான மனித உரிமைகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானும், பாஹ்ரெய்னும் தற்போது அனைத்துலக மனித உரிமைகள் தர நிர்ணயங்களை உச்ச அளவில் பேணிப் பாதுகாக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனீவா பணிப்பாளர் ஜூலிட்டி டி ரிவிரோவா தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இரு நாடுகளும் செயலாற்ற வேண்டும் எனவும் கோரியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
Saturday, 24 May 2008
சிறிலங்கா வெளியேற்றம் - ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றி: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
Subscribe to:
Post Comments (Atom)

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் சிறிலங்கா உறுப்புரிமை இழந்தமையானது ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றியாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment