Thursday, 22 May 2008

ஐ.நா.வில் இலங்கையின் தோல்விக்கு மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்பு

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீண்டும் தனது உறுப்புரிமையை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் தோல்வி கண்டுள்ளமையை மனித உரிமைகள் பணியாளர்கள் வரவேற்றுள்ளனர்.

சித்திரவதை, நிவாரணப் பணியாளர்கள் மீதான தாக்குதல், ஆட்கடத்தல்கள், நீதிவிசாரணைக்கு புறம்பான படுகொலைகள் தொடர்பான இலங்கையின் பதிவுகளை கடுமையாக விமர்சித்து வந்த மனித உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் ஆர்வலர்களே ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் இலங்கை அங்கத்துவத்தை இழந்திருப்பதை வரவேற்றுள்ளனர்.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஸ்ரீவ் குரோசோ இலங்கையின் தோல்வியை வரவேற்றிருப்பதுடன் பேரவையின் 15 வெற்றிடங்களுக்கு 19 நாடுகள் போட்டியிட்டதாகும். அதில் மனித உரிமைகள் தொடர்பாக மோசமான பதிவுகளைக் கொண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கைக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்ட அமைப்புகளில் ஸ்ரீவ் குரேசோவின் அமைப்பும் ஒன்றாகும்.

எதிர்காலத்திற்கு இது முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக அமையும். ஏனென்றால் மோசமான பதிவுகளைக் கொண்ட சர்வாதிகாரத்தனமான ஆட்சிகள் தாம் முன்னணிக்கு வருவது தொடர்பாக மிகவும் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமென நான் கருதுகிறேன் என்று குரே சோ ராய்ட்டருக்கு கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கை தோல்வியடைந்தமையையிட்டு தான் மகிழ்ச்சியடைந்திருப்பதாக ஐ.நா.கண்காணிப்பகம் (U.N. WATCH) தெரிவித்துள்ளது. அதேசமயம் ஐ.நா.மனித உரிமை பேரவை உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் சில நாடுகள் தொடர்பாகவும் இந்தக் கண்காணிப்பு அமைப்பு விசனத்தை வெளியிட்டிருக்கிறது.

மனித உரிமைகள் பேரவைக்கு மோசமான முறையில் உரிமைகளை மீறுவோரை தேர்வுசெய்வதை ஐ.நா.நிறுத்தாதவரை கோழிக்குஞ்சுகளுக்கு நரிகள் காவல் காக்கும் நிலைமையையே நாம் தொடர்ந்தும் கொண்டிருப்போம் என்று ஐ.நா.கண்காணிப்பகத்தினைச் சேர்ந்த ஹிலால் நியூயர் தெரிவித்துள்ளார்.

No comments: