Thursday, 22 May 2008

மாலைதீவில் விபசாரத் தொழிலில் ஈடுபட்ட இலங்கைப் பெண்கள் உட்பட பலர் கைது

மாலைதீவில் சொசம்வில்லா பகுதியில் வீடு ஒன்றில் விபசாரத்தொழிலில் ஈடுபட்டிருந்த இலங்கையர் உட்பட பத்துப் பேரை மாலை தீவு பொலிஸார் திங்கட்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

அயலவர்கள் தெரிவித்த தகவலையடுத்து பொலிஸார் இந்த வீட்டைக் கண்காணித்த பின்னர் வீட்டின் ஐந்து அறைகளின் கதவுகளை உடைத்துக் கொண்டு உட்புகுந்த போது சந்தேக நபர்கள் கூரையின் மீது ஏறித்தப்பிக்க முயன்றனர். ஆனால் பொலிஸார் அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

இவர்கள் கைவிலங்கிடப்பட்டு பொலிஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதை அந்த வீட்டுக்கு வெளியே நின்று பலர் பார்த்தனர்.

விருந்தினர் விடுதி என்ற பெயரில் இந்த வீட்டில் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக விபசாரத்தொழில் இடம் பெற்று வருவதாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த விடுதியில் போதைவஸ்து, மதுபானம், பெண்கள் தாராளமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இலங்கைப் பெண்கள் இங்கு விபசாரத் தொழிலில் ஈடுபட்டு 35.29 அமெரிக்க டொலரைப் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இம்மாதம் 31 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணுடன் பலவந்தமாக விபசாரத்தில் ஈடுபட்டதாக ஐந்து வெளிநாட்டவர்களை மாலை தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் விபசாரத்தில் ஈடுபட்ட இலங்கைப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் ஏற்கனவே நாட்டைவிட்டு அனுப்பப்பட்டு மீண்டும் மாலைதீவுக்குள் வந்திருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு உஷ்பெகிஸ்தானைச் சேர்ந்த ஐந்து பெண்களும், பன்னிரண்டு இலங்கைப் பெண்களும் இரு ஆண்களும் விபசாரத் தொழிலில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாகவும் மாலைதீவு குடியகல்வு அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: