Thursday, 22 May 2008

மட்டக்களப்பில் பயணிகள் மீது தாக்குதல் ஐவர் வெள்ளை வானிலும் கடத்தல்

* கடைகளில் கொள்ளை, தீக்கிரை

மட்டக்களப்பு தன்னாமுனைப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை பஸ் ஒன்றில் பயணம் செய்தவர்கள் மீது ஆயுதக்குழுவொன்று தாக்குதல் நடத்திய அதேநேரம், ஐவர் கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பகுதியில் நேற்று முற்பகல் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் தொடர்ச்சியாகவே தன்னாமுனைப் பகுதியிலும் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற இ.போ.ச. பஸ்ஸில் ஏறாவூரை நோக்கிச் சென்றவர்களே தன்னாமுனைப் பகுதியில் வைத்து தாக்கப்பட்டும் கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பயணிகள் பஸ்ஸை வழி மறித்த ஆயுதக் குழுவொன்றே முஸ்லிம்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

அதேநேரம், பஸ்ஸில் வந்த ஐவரை வெள்ளை வானொன்றில் ஆயுதபாணிகள் கடத்திச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் நேற்று மாலை மட்டு. நகரில் மூன்று வர்த்தக நிலையங்கள் ஆயுதபாணிகளால் உடைக்கப்பட்டு பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் வர்த்தகர் ஒருவரது வானும் அடித்து நொருக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதேநேரம், நேற்று இரவு 9 மணியளவில் மட்டு. நகரில் பசார் வீதியில் காத்தான்குடி வர்த்தகர்களுக்குச் சொந்தமான இரு புடவை வர்த்தக நிலையங்கள் ஆயுதபாணிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது

No comments: