Thursday, 22 May 2008

புலிகள் சார்பு தன்னார்வ நிறுவனங்களின் நச்சுப் பிரசாரமே இலங்கை ஐ.நா. பேரவையில் உறுப்புரிமை இழந்ததற்கு காரணம்

* அரசு கடும் சீற்றம்; சர்வதேசம் அடிமைப்படுத்த முடியாது; அமைச்சர் யாப்பா

எம்.ஏ.எம். நிலாம்

உள்நாட்டு சர்வதேச அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் நச்சுத்தன்மையான பிரசாரத்தினாலேயே ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை உறுப்புரிமையை இழந்ததாக குற்றம் சாட்டும் அரசாங்கம், புலிகளுக்கு ஆதரவான சக்திகளும் இதன் பின்னணியிலிருந்து செயற்பட்டதாகவும் கடுமையாக சாடியுள்ளது.

அதேசமயம் புலிகளை தோற்கடிக்கும் முனைப்பிலிருந்து ஒரு படி கூட அரசாங்கம் பின் வாங்கப் போவதில்லையெனவும் சர்வதேசம் உட்பட எந்தவொரு சக்திகளும் அடிமைப்படுத்த இடமளிக்கப்படாதெனவும் உறுதிபட அறிவித்திருக்கிறது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு அரசாங்கத் தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போது அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷண யாப்பா மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.

அவர் ஊடகவியலாளர்களிடம் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

`ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நாம் இம்முறை உறுப்புரிமையை இழந்த போதிலும் 192 நாடுகளில் 101 நாடுகள் எமக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. 50 சதவீதத்துக்கும் கூடுதலான ஆதரவை நாம் பெற்றுக் கொண்டுள்ளோம். உறுப்புரிமையை நாம் இழந்த போதிலும் எமது கருத்துகளைச் சொல்வதற்கும் விவாதங்களில் பங்கேற்பதற்குமான உரிமையை நாம் இழந்து விடவில்லை. வாக்களிக்கும் உரிமையை மட்டுமே தவறவிட்டுள்ளோம்.

இந்தப் போட்டியில் இலங்கையை தோற்கடிக்க வேண்டுமென்ற விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல உள்ளூர் சக்திகளும் அரச சார்பற்ற நிறுவனங்கள் எனக் கூறிக் கொள்ளும் சில அமைப்புகளும் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் மிகவும் மோசமான வகையில் நடந்து கொண்டன. வேறெந்த நாடும் எதிர் கொள்ளாத வகையில் இலங்கை மீது சேறு பூசப்பட்டுள்ளது.

நோபல் பரிசு பெற்ற மூன்று பிரபலஸ்தர்களான தென்னாபிரிக்காவின் டெஸ்மண்ட் டுட்டு, ஆர்ஜன்ரினாவின் அடொல் போ பெரஸ் எஸ். கியூவல், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கர்ட்டர் போன்றவர்கள் இலங்கை விடயத்தில் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். இதில் முக்கியமான விடயம் தென்னாபிரிக்காவில் இயங்கும் சில அமைப்புகள் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளன.

இந்தத் தோல்வியால் அரசு ஒரு போதும் பின்னடைவைக் காணமாட்டாது. அரசின் எந்தவொரு முயற்சியும் முன்னெடுப்புகளும் இதன் மூலம் தளர்ந்து விடாது. நாட்டின் பாதுகாப்பையும் ஜனநாயகத்தையும் உறுதி செய்யும் நடவடிக்கைகளை அரசு ஒரு போதும் கைவிடப் போவதில்லை. பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக விடுதலைப் புலிகளை முற்றாகத் தோற்கடிக்கும் வரை யுத்தத்தை அரசு ஒரு போதும் கைவிடப் போவதில்லை யுத்த முனைப்பிலிருந்து நாம் ஒரு அங்குலமேனும் பின்வாகப் போவதுமில்லை.

இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது ஐக்கிய தேசியக் கட்சியும் வங்குரோத்து அரசியலை சர்வதேச மட்டத்துக்குக் கொண்டு சென்று நாட்டுக்கு அவலப் பெயரைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். விடுதலைப் புலிகளின் தேவையை நிறைவேற்றுவதில் இவர்கள் முனைப்புடன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

சர்வதேசத்தின் அச்சுறத்தல்களைக் கண்டு நாம் எமது நடவடிக்கைகளை மாற்றவோ, கைவிடவோ போவதில்லை உள்ளூர், சர்வதேச சக்திகள் எம்மை அடிமைப்படுத்த ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்' எனவும் அமைச்சர் அநுர பிரியதர்ஷண யாப்பா தெரிவித்தார்.

No comments: