மூதூரில் ஏற்படுத்தப்பட்டிருந்த மீன்பிடித்தடையை பகுதியளவில் தளர்த்துவதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று செவ்வாய்கிழமையிலிருந்து காலை 6 மணிமுதல் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
கடந்த 10ஆம் திகதிக்குப் பின்னர் மூதூர் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு கடற்படையினர் தடைஏற்படுத்தியிருந்தனர். இதனைக் கண்டித்து கடந்த திங்கட்கிழமை மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்ததுடன், மீன்பிடித் தடையை நீக்குமாறு பிரேரணையொன்றையும் கையளித்திருந்தனர். இதற்கமையவே மீன்பிடித் தடையைத் தளர்த்துதவதற்கு கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
எனினும், விடிந்தபின்னரே கடலுக்குள் அனுமதிப்பதற்கு கடற்படையினர் எடுத்திருக்கும் நடவடிக்கை தொடர்பாக மீனவர்கள் திருப்தி தெரிவிக்கவில்லை. 70 வீதமான மீனவர்கள் இருட்டிய பின்னரே வலைவிரிப்பதற்குச் செல்வதாக மூதூர் மீனவர்கள் கூறுகின்றனர்.
விடிந்த பின்னர் மீன்கள் வலைக்குள் சிக்கிக்கொள்ளாது எனவும், இரவு வேளைகளிலேயே மீன்களைப் பிடிக்கமுடியும். வுpடிந்த பின்னர் மீன்பிடிக்கச் செல்பவர்கள் தூண்டில்களைப் பயன்படுத்தியே மீன்பிடிப்பவர்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது காலை 6 மணிக்குப் பின்னர் மீன்பிடிப்பதற்கு கடற்படையினர் வழங்கியிருக்கும் அனுமதியால் பெரியளவில் பலன் ஏற்படப்போவதில்லையென மூதூர் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி திருகோணமலை கடற்படையினரின் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே மூதூர் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி.தஸநாயக்க கடந்த வாரம் கூறியிருந்தார்.
No comments:
Post a Comment