புலனாய்வுத் தகவல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களுடன் பகிர்ந்துகொள்வதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் இலங்கை கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் வசந்த கருணாகொட, மோசமான ஆயுதங்களுக்குப் பயன்படுத்தப்படும் இரசாயணப் பொருள்களை திறந்த கடல்மார்க்கமாக தேவையான துறைமுகத்துக்கு அவர்கள் எடுத்துச்சென்று தாக்குதல்களை நடத்தும் சக்தியைக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
தென்மேற்கு அரேபியாவின் துறைமுக நகரமான அடனில் கோல் கப்பல், ஜோர்தானில் அமெரிக்காவின் போர்க்கப்பல் மற்றும் பிரான்சின் லிம்பேர்க் கப்பல் தாக்கப்பட்டவற்றை இதற்கு உதாரணமாகக் கூறமுடியும் என அவர் குறிப்பிட்டார். விடுதலைப் புலிகளால் நடத்தப்படும் தாக்குதல்களைப் போலவே இந்தத் தாக்குதல்களும் திட்டமிட்டு நடத்தப்பட்டிருப்பதால் விடுதலைப் புலிகளுக்கும் அந்தத் தாக்குதல்களுக்கும் தொடர்பு இருக்கலாமென அவர் கூறினார்.
“தொடர்புகள் இல்லாமல்செய்வது சாத்தியமற்றது. கடல்வழியான பயங்கரவாத செயற்பாடுகள் குறித்த தகவல்களை விடுதலைப் புலிகள் ஏனைய பயங்கரவாத அமைப்புக்களுக்கு வழங்குகின்றன என்பது புலனாகிறது” என லண்டனில் நடைபெற்ற 7வது வருடாந்த எதிர்கால கடற்படைத்திட்டங்கள் மற்றும் தேவைகள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பாரிய அழிவுகளைத் தரக்கூடிய இரசாணயப் பொருள்களைக் கடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. திறந்த கடல்வழிப்பாதையைப் பயன்படுத்தி விரும்பிய எந்தவொரு துறைமுகத்துக்கும் அவர்கள் தாக்குதல்களை நடத்தமுடியும். அவற்றை தடுக்க இயலாது என இலங்கை கடற்படைத் தளபதி கூறினார். விடுதலைப் புலிகள் பெரும்பாலும் நீரக்கடியில் செல்லக்கூடிய சாதனங்களைப் பயன்படுத்தியே துறைமுகங்களில் தாக்குதல்களை நடத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
“விடுதலைப் புலிகள் அமைப்பே நடுக்கடலில் போர்க்கப்பல்களில் ஆயுதங்களைக் கடத்தும் அமைப்பு. ஆயுதங்கள், வெடிபொருள்கள், தொலைத்தொடர்புக் கருவிகள் போன்றவற்றை அவர்கள் தமக்குள்ளேயும், ஏனைய பயங்கரவாத அமைப்புக்களுக்கிடையிலும் கடத்தல்களில் ஈடுபடுகின்றனர்” என வசந்த கருணாகொட கூறினார்.
இலங்கை கடற்படை இவ்வாறான கப்பல்களை இனங்கண்டு அவற்றில் 7 கப்பல்களை மூழ்கடித்திருப்பதாக லண்டனில் மேலும் உரையாற்றிய இலங்கை கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் வசந்த கருணாகொட மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment