ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமை தூதுவர்கள் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் ஜுன் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு சர்வதேச சட்டங்களுக்கு அமைய இலங்கையில் மனித உரிமைகள் கடைப்பிடிக்கப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிவிலக்கை அடுத்த வருடத்துக்கும் நீடிப்பதற்கு அவசியமான மனித உரிமை விடயங்கள் இலங்கையில் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை இந்தக் குழு கண்காணிக்கவுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமை தூதுவர்களான நெதர்லாந்தைச் சேர்ந்த அர்ஜன் ஹம்பேர்க், சுவீடனைச் சேர்ந்த நோர்லான்டர் மற்றும் ஸ்பெய்னைச் சேர்ந்த ஸ்கோபா ஆகியோர் அடங்கிய குழு ஜுன் மாதம் 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், அவற்றைக் கண்காணிப்பதற்காகவே மனித உரிமை தூதுவர்களையும் அனுப்பியிருப்பதாக தூதரக வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை உறுப்புரிமையை இழந்த பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் மனித உரிமைப் பிரதிநிதிகளாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமை தூதுவர்கள் விளங்குகின்றனர். மனித உரிமைகள் ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையில் நேரடித் தாக்கம் செலுத்தும் என்பதால் ஐரோப்பிய ஒன்றியம் மனித உரிமை விடயத்தில் விசேட கவனம் செலுத்தியிருப்பதாகத் தெரியவருகிறது.
இலங்கையின் மனித உரிமை உட்கட்டமைப்புத் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு மனித உரிமை மீறல்கள், சிறுவர்களின் மனித உரிமைப் பாதுகாப்புத் தொடர்பான விடயங்களில் அந்தக் குழுவினர் ஆய்வுகளை மேற்கொள்வார்கள் என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இராஜதந்திர வட்டாரத் தகவல்களுக்கு அமைய, இலங்கை வரவிருக்கும் மனித உரிமை தூதுவர்கள், இலங்கையின் உயர்மட்ட மற்றும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தவிருப்பதாகத் தெரியவருகிறது.
சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவின் பரிந்துரைகள் குறித்தும் இந்தக் குழுவினர் விசேட கவனம் செலுத்துவார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment