Tuesday, 27 May 2008

கிழக்கில் தோன்றியருக்கும் பதற்றமான சூழ்நிலைக்கு மூன்றாம் தரப்பே காரணம்- கிழக்கு மாகாணசபை முதலமைச்சர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கல்லடி மற்றும் காத்தான்குடி பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களுக்கு மூன்றாவது சக்தியொன்றே காரணமென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், முஸ்லிம் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் பள்ளிவாசல்களின் சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும், கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில் திங்கட்கிழமை இடம்பெற்றது. 22ஆம் திகதி மட்டக்களப்பில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கடத்திச்செல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் வன்முறைநிறைந்த சூழலைத் தணிப்பது குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

வன்முறைகளுக்குக் காரணமாகவிருக்கும் அந்த மூன்றாவது சக்தியை இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சரிடமும், ஏனைய அதிகாரிகளிடமும் தாம் கோரிக்கை விடுத்ததாக ஏறாவூர் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் செயலாளர் சி.அசனார் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

“நாங்கள் பாதுகாப்பற்ற மக்கள். எம்மிடம் ஆயுதங்கள் இல்லை. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளிடம் ஆயுதமும் உண்டு, அதிகாரமும் உண்டு. எனவே, அவர்கள் அந்த மூன்றாவது சக்தியைக் கண்டுபிடித்து உடனடியாக அழிக்க வேண்டும்” என்றார் அவர்.

முஸ்லிம் இளைஞர்கள் அச்சமடைந்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலைகளை முடிவுக்குக்கொண்டுவந்து வழமை நிலையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். “எமது இளைஞர்கள் அமைதியாக இருக்கவே விரும்புகின்றோம். இல்லாவிட்டால் எமக்கு பாதிப்புக்கள் ஏற்படும். அண்மையில் நடைபெற்றதைப்போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது என அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை. வன்முறைச் சம்பவங்கள் ஆரம்பித்த பின்னர் எந்தவொரு அரசாங்க அமைச்சரும் இந்தப் பக்கம் வரவில்லை” என ஏறாவூர் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் செயலாளர் குறிப்பிட்டார்.

கடந்த 22ஆம் திகதி கடத்தப்பட்ட இரண்டு முஸ்லிம் இளைஞர்களும் கொல்லப்பட்டிருந்தார் அவர்களின் சடலங்களாவது வழங்கப்படவேண்டுமென சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆயுதக் குழுவினர் என்பதால் அவர்களுக்கு எதிராக அச்சமாக உள்ளது என சம்மேளனத்தின் தலைவர் வை.எம்.அம்துல் காதர் கொழும்பு ஊடகத்திடம் தெரிவித்தார்.

“தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி இந்தப் பிரதேசத்தை வெளியேற்றியுள்ளது. முதலில், முஸ்லிம் பிரதிநிதி ஒருவருக்கு முதலமைச்சர் பதவி வழங்குவதாக உறுதிமொழி வழங்கியது. அதே உறுதிமொழியை தமிழர்களுக்கும் வழங்கியது. துற்பொழுது ஏற்பட்டிருக்கும் வன்முறைகளுக்கு இதுவே மூலகாரணமாக அமைந்துள்ளது” என்றார் அப்துல் காதர்.

No comments: