Tuesday, 27 May 2008

கிழக்கில் அனைத்துலக தொண்டர் அமைப்புக்களின் பணிகள் இடைநிறுத்தம்

கிழக்கு மாகாணத்தில் தற்போது தோன்றியுள்ள பதற்றமான சூழ்நிலைகளைத் தொடர்ந்து அங்கு தமது பணிகளை இடைநிறுத்துவதற்கு அனைத்துலக தொண்டர் அமைப்புக்கள் தீர்மானித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தொண்டர் அமைப்பின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது:

வேல்ட் விசன் (லங்கா) எனப்படும் தொண்டர் அமைப்பு தனது பணியாளர்களுக்கு பயண எச்சரிக்கைகளை விடுத்துள்ளதுடன், பயணக்கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் மூவர் கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பின் காத்தான்குடியில் அடையாளம் தெரியாத காடையர் கூட்டத்தினால் தாக்கப்பட்டதை தொடர்ந்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஒரு பணியாளர் காயமடைந்துள்ளதுடன், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உந்துருளியும் சேதமாக்கப்பட்டுள்ளது.

ஏனைய இரு பணியாளர்களும் தாக்குதல்களில் இருந்து தப்பி விட்டனர். அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள கலவரத்தின் வெளிப்பாடாகவே இந்த தாக்குதல் அமைந்துள்ளது என்றார் அவர்.

இதனிடையே, கிழக்கில் தோன்றியுள்ள பதற்ற நிலையை தொடர்ந்து தமது பணிகளை இடைநிறுத்தி வைக்க பல தொண்டர் அமைப்புக்கள் தீர்மானித்து வருவதாக அவற்றின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். தமது பணியாளர்களின் பாதுகாப்பினை முன்னிட்டே இந்த முடிவை எடுக்க முயற்சித்து வருவதாக தொண்டர் அமைப்புக்கள் மேலும் தெரிவித்துள்ளன.

துணை இராணுவக்குழுவான பிள்ளையான் குழுவிற்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக கிழக்கு மாகாணத்தில் பெரும் பதற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments: