Thursday, 22 May 2008

மட்டக்களப்பில் உள்ள அனைத்துலக தொண்டு நிறுவனப் பணியாளர்கள் இருவர் கடத்தல்

மட்டக்களப்பில் அனைத்துலக தொண்டு நிறுவனம் ஒன்றின் உள்ளுர் பணியாளர்கள் இருவர் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவான பிள்ளையான் குழுவால் கடத்தப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு கடத்தல் சம்பவங்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவன அதிகாரிகள் மனித உரிமை ஆணைக்குழுவிலும் அமைச்சர்களிடமும் முறையிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நொச்சிமுனையைச் சேர்ந்த முரளிதரன் (வயது 35) கடந்த 4 ஆம் நாள் துணைப்படைக் குழுவால் கடத்தப்பட்டுள்ளார் என்று அமைச்சர் பெ.இராதாகிருஸ்ணனிடம் முறையிடப்பட்டுள்ளது. இவர் மட்டக்களப்பில் இயங்கும் அனைத்துலக தொண்டு நிறுவனமான வேர்ல்ட் விசனின் பணியாளர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கடத்தப்பட்டமை குறித்து வேர்ல்ட் விசன் அதிகாரிளும் இவரது மனைவியும் அமைச்சர் பெ.இராதாகிருஸ்ணனிடம் முறையிட்டுள்ளனர்.

வேலை முடிந்து ஈ.பி. எம்.யு - 2404 என்ற இலக்கமுடைய உந்துருளியில் வந்து கொண்டிருந்த போது வெள்ளை நிற சி.பி.எல்.ஏ-6308 என்ற இலக்கமுடைய வானில் வந்த துணைப்படைக் குழுவினரே தனது கணவரைக் கடத்தியுள்ளனர் என்று இவரது மனைவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தனது கணவர் வெலிக்கந்தையில் உள்ள காட்டுமுகாம் என்ற இடத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் தனது முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் மட்டக்களப்பு ஊரணியைச் சேர்ந்த செபஸ்ரியன் குட்பலோ (வயது 32) என்பவர் கடந்த 15 ஆம் நாள் கடத்தப்பட்டுள்ளார் என்று முறையிடப்பட்டுள்ளது. இவர் நோர்வே அகதிகள் பேரவையின் பணியாளர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், நோர்வே அகதிகள் பேரவையில் கடந்த மூன்று வருடங்களாக பணியாற்றி வருபவர் என்றும் அவரை விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதியமைச்சர் இராதாகிருஸ்ணனிடமும் அமைச்சர் மகிந்த சமரசிங்கவிடமும் நோர்வே அகதிகள் பேரவையின் பணிப்பாளர் கிறிஸ் பளில் முறையிட்டுள்ளார்.

கடந்த 15 ஆம் நாள் கொழும்புக்குப் பணி நிமித்தம் வருகை தந்த இவர், தன்னுடன் வந்த பணியாளர்களை அலுவலகத்தில் இறக்கிவிட்டு வாகனத் தரிப்பிடத்தில் வாகனத்தை தரிப்பிடச் சென்றபோதே காணாமல் போய் உள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

No comments: