Thursday, 1 May 2008

பிள்ளையான் இந்தியாவின் கைம்பொம்மை என்ற ஜே.வி.பி.யின் கூற்று ஏற்றுக்கொள்ள முடியாதென தேசப்பற்றுடைய தேசிய இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் கைம்பொம்மையாக பிள்ளையான் செயற்படுகின்றமைக்கு எவ்வித சாட்சிகளும் இல்லை எனவும், அதனால் தமது அமைப்பு இதனை ஏற்றுக்கொள்ளாது எனவும் தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (ஏப்ரல்30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பிள்ளையான் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டுள்ளதாகவும், கடந்த உள்ளுராட்சித் தேர்தல்களின் போது எவ்வித வன்செயல்களிலும் பிள்ளையான் ஈடுபடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஹக்கீம் குழு போன்ற வெளிநாட்டு சக்திகளை தோற்கடித்து சுதேச சக்திகளை வெற்றிபெறச் செய்ய கிழக்குத் தேர்தல்களை ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கிழக்கு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்குத் தேர்தல் மிகவும் முக்கியமானதெனவும், இதனால் கிழக்கு மக்கள் புத்திசாதூரியமாக செயலாற்ற வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

No comments: