Thursday, 1 May 2008

உணவு நெருக்கடியை எதிர்கொள்ள திட்டம் எதுவும் அரசிடம் இல்லை--ஆட்சியை அகற்ற இன்று முதல் போராட்டம்; ஜே.வி.பி. அறிவிப்பு

உலகில் ஏற்பட்டு வரும் மோசமான உணவு நெருக்கடியிலிருந்து நாட்டு மக்களைக் காப்பாற்றும் முன்னேற்பாட்டுத் திட்டமோ, செயற்பாடோ அரசாங்கத்திடம் இல்லையென கடுமையாக சாடியிருக்கும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), அரசாங்கத்தை பதவி நீக்குவதற்கான வேலைத்திட்டத்தை மே முதல் (இன்று) முன்னெடுக்கப் போவதாக தெரிவித்திருக்கிறது.

உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படப் போகின்ற நிலையில், நாட்டு மக்களை இதிலிருந்து பாதுகாப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்கவில்லையென குற்றம் சாட்டியிருக்கும் ஜே.வி.பி., அரசைக் கலைப்பதற்கான வேலைத்திட்டத்தை மே மாதம் முதல் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நேற்று புதன்கிழமை இலங்கை மன்ற கல்லூரியில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

கடந்த 2 1/2 வருட காலப்பகுதியிலேயே அதிகளவான விலையுயர்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு உலக சந்தையே காரணமென கூறப்படுகின்றது.

உலக சந்தையில் மசகு எண்ணெய், காஸ், பால்மாவின் விலையில் ஏற்பட்ட மாற்றமே நாட்டில் எதிரொலிக்கின்றதாயின் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி, தேங்காய், அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஏன் அதிகரித்துள்ளன?

தேங்காய் 50 ரூபாவாக அதிகரித்திருக்கிறது. அதுபோல் மரக்கறியின் விலைகளும் என்றுமில்லாத வகையில் அதிகரித்துள்ளதுடன் நாட்டின் பிரதான உணவான அரிசி 100 ரூபாவை எட்டியுள்ளது. குறிப்பாக மார்ச், ஏப்ரல் மாதங்கள் நெல் அறுவடை செய்யப்படும் காலப்பகுதியாகையால் அரிசியின் விலை கடந்த காலங்களில் குறைவடைவது வழமை. ஆனால் இன்று இதற்கு நேரெதிராக நிகழ்ந்துள்ளது.

இதற்கு காரணம் கடந்த வருடம் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் நெல்லை கொள்வனவு செய்ததன் பிரதி பலனேயாகும். சந்திரிகா எந்தவொரு விவசாய உள்ளூர் உற்பத்திகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கவில்லையென ஐ.தே.க.ஆட்சியைக் கலைத்தார். உற்பத்தியை பெருக்கி மகிழ்ச்சியாக வாழ்வோம் என வந்த அரசாங்கம் அப்போது 50 ரூபாவுக்கு விற்கப்பட்ட அரிசியை 45 ரூபாவுக்கு வழங்கி மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. மாறாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எமது கட்சியை சேர்ந்த அநுரகுமார திஸநாயக்க விவசாய அமைச்சராகவிருந்த போது உள்ளூர் விவசாய உற்பத்திகளை அதிகரிக்கும் பொருட்டு தூரநோக்குடன் செயற்பட்டதுடன் பெருமளவு நெல்லை எதிர்காலம் கருதி கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தினார். தேங்காய், இறப்பர், போன்றவற்றின் பலன்களை பல வருடங்களின் பின் எதிர்பார்க்க முடியும். ஆனால் நெல்லை ஆகக் குறைந்தது 6 மாதகாலத்துக்குள் அறுவடை செய்ய முடியுமென்ற வகையில் இந்த அமைச்சுக்கு பொறுப்பானவர்கள் எதிர்காலத்தில் அரிசி விலையைக் குறைப்பதற்கு நெல் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கையெடுக்காது வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யமுற்படுகின்றனர்.

அதேபோல் அரசாங்கம் பயிர்வளர்ப்போம் நாட்டை கட்டியெழுப்புவோம் என்ற செயற்திட்டத்தை முன்னெடுப்பதாக கூறிவருகின்றது. இவர்கள் கூறியவாறு பயிர் வளர்த்தால் இன்று பொருட்களின் விலைகள் அதிகரித்திருக்காது. தற்போது அரசாங்கம் மக்களை ஏமாற்றுவதிலேயே கவனத்தை செலுத்தியுள்ளது.

கடந்த டிசம்பரில் பால்மா, பருப்பு உட்பட 10 அத்தியாவசியப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ததெனினும் அரிசியின் விலையை அவ்வாறு மேற்கொள்ளவில்லை. இன்று அரிசி விலை என்றுமில்லாதவாறு அதிகரித்த போது மக்களை ஏமாற்றுவதற்கு விலையை நிர்ணயம் செய்து அரசு நாடகமாடுகின்றது.

உண்மையாக மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி வழங்க வேண்டுமாயின் அரசாங்கம் மானியத்தை அரிசிக்கு வழங்கி கோப்சிற்றி, கூட்டுறவுச்சங்கம் மூலம் விநியோகிக்க முடியும். மகிந்த சிந்தனையில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக கூறியிருந்த போதும் அதனை அரசாங்கம் காற்றில் பறக்கவிட்டுள்ளது.

முதலில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு வரியை நீக்கியது. இந்த லாபம் மக்களைச் சென்றடையாது, என்பதைத் தெரிந்திருந்தும் மக்களை ஏமாற்றுவதற்கே இதனைச் செய்தது, உலகச்சந்தையில் உயர்வு ஏற்பட்டதென எரிபொருட்களின் விலைகளை அரசாங்கம் அதிகரித்தது.

மண்ணெண்ணெய்க்கு கூட அரசு நிவாரணங்களை வழங்க வில்லை. இதனால் விவசாயிகளே பெருமளவில் பாதிக்கப்பட்டனர். அது மட்டுமல்லாமல் எரிபொருட்களின் விலையேற்றத்தால் உற்பத்திபாதிக்கப்பட்டதுடன் உற்பத்தி செலவு அதிகரித்தன். பேரில் பொருட்களின் விலைதான் உயர்ந்தது.

மசகு எண்ணெய்யின் உயர்வினால் சில நூற்றாண்டுகளுக்கு தனது நாடு குறித்து சிந்திக்கும் அமெரிக்கா எரிபொருளுக்காக மெதனோலை பாவிக்க முற்பட்டுள்ளது. இது மெதனோல் போஞ்சி மற்றும் தாவங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதால் அவ்வுற்பத்தியை அதிகரித்ததுடன் கோதுமை உற்பத்தியை மட்டுப்படுத்தியுள்ளது.

இதன் விளைவே உலகில் கோதுமை தட்டுப்பாட்டுக்கு காரணம் ஆகும். அது போல் காலநிலை மாற்றத்தாலும் ஏற்பட்ட உற்பத்தி வீழ்ச்சி காரணமாக இந்தியா, பாகிஸ்தான் அரிசியை ஏற்றுமதி செய்வதில்லை. இந்நிலையில் எதிர்காலத்தில் உலகில் பஞ்சம் ஏற்படுமென எச்சரித்த நிலையில் நாட்டு மக்களை இதிலிருந்து பாதுகாப்பதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் நாட்டை சரியாக கொண்டு நடத்த முடியாத நிர்வகிக்க முடியாத ஊழல் மோசடி மிக்க இந்த அரசை மக்கள் ஏற்க மறுக்கின்ற நிலையில் ஜே.வி.பி.விவசாயிகள் சங்கம், நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் சங்கங்கள் உட்பட புத்திஜீவிகளை அணிதிரட்டி முன்னணியமைத்து அரசை வீட்டுக்கு கலைப்பதற்கு மே மாதம் முதல் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments: