பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு தமக்குத் தேவையில்லையென பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். ஆயுதங்களையோ அல்லது ஏனைய பலங்களையோ பயன்படுத்தாமலேயே எதிர்வரும் தேர்தலில் ஜனநாயக ரீதியில் போட்டியிட இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டால் அவர்கள் ஜனநாயக ரீதியில் செயற்படுவதற்கு ஆதரவு வழங்கப்படுமென திருகோணமலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்திருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பேச்சாளர் ஆசாத் மௌலானா, வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஆயுதங்கள் பயன்படுத்தப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளார்.
“ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் எமது நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் தெளிவாகத் தெரியப்படுத்தியுள்ளோம். மட்டக்களப்பு உள்ளுராட்சி மன்றத் தேர்தலைப் போன்று மாகாணசபைத் தேர்தலிலும் ஜனநாயக ரீதியில் போட்டியிடுவோம்” என ஆசாத் மௌலானா கொழும்பு ஊடகமொன்றிடம் கூறியுள்ளார்.
“எமக்குத் தேவையானது எல்லாம் என்னவென்றால் மக்களின் ஆதரவே. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு அல்ல. மக்களின் முழு ஆதரவும் இருந்தால் போதும். கிழக்கு மாகாணத் தமிழ் மக்களின் நலனில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உண்மையான அக்கறை இருக்குமாயின் அவர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ளோம். ஆனால், அவர்கள் விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சித் திட்டத்துக்கு அமையவே செயற்படுகின்றனர்” என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பேச்சாளர் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment