Saturday 17 May 2008

'அமெரிக்க - இந்திய கூட்டு நலனும் தமிழர் விடுதலை போராட்டமும்" -தாரகா-

தமிழர் விடுதலைப் போராட்டம் என்பது வெறுமனே தமிழர் தேசத்துடன் மட்டுப்பட்டது அல்லது இலங்கை அரசியலுடன் மட்டுப்பட்டது இன்னும் சற்று மேலே போனால் பிராந்திய அரசியலுடன் தொடர்புபட்டது என்றெல்லாம் நாம் நம்புவோமானால் நம்மை விட முட்டாள்கள் வேறு யாருமில்லை.

இன்றைய உலக அரசியல் போக்கென்பதே புவிசார் அரசியல் காய்நகர்த்தல்களில்தான் தங்கியிருக்கிறது. இந்த பின்புலத்தில் பார்ப்போமானால் சமீப காலங்களில் உருவாகிய முக்கிய புவிசார் அரசியல் கூட்டு அமெரிக்க-இந்திய கூட்;டாகும்.

அமெரிக்காவும் இந்தியாவும் தமக்கான கூட்டு நலன் சார்ந்து ஏற்படுத்தி வரும் நெருக்கத்தின் விழைவுகளைத்தான் நாம் தற்போது சந்தித்து வருகின்றோம்.

அமெரிக்க-இந்திய நெருக்கத்தின் விழைவுதான் இதுவரை காலமும் இல்லாதளவிற்கு சீனா சிங்களத்திற்கு முண்டு கொடுத்திருப்பதன் பின்னனி ஆகும்.

கடந்த 2005 இல் இந்தியாவிற்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்க செயலர் கொண்டலிசா ரைஸ் சந்தேகமில்லாமல் இந்தியா ஒரு உலக சக்தியாக மாறுவதற்கு அமெரிக்கா உதவும் என தெரிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக 2005 நவம்பரில் மேற்கு வங்காளத்தின் கலைக்குண்டா விமானப் படைத்தளத்தில் இந்திய - அமெரிக்க விமானப்படை பயிற்சி ஒன்று இடம்பெற்றது. அமெரிக்காவின் தாக்குதல் விமானப் படையணிகள் அனைத்தும் இப்பயிற்சியில் பங்கு கொண்டன.

இப்பயிற்சிக்கான ஆயத்தங்களின் போது இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மேற்கு வங்காள முதலமைச்சரிடம் தெரிவித்த விடயங்கள், அந்த நேரத்தில் குறிப்பிட்ட சில ஊடங்களால் மட்டுமே வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

கூட்டுப்பயிற்சிக்கான இடத்தை மாற்றும்படி மேற்கு வங்காள அரசு நெருக்கடிகளைத் தருமானால், ஆளும் ஜக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து பதவி விலகுவது, மேற்கு வங்காளத்தை ஜனாதிபதி ஆட்சியின் கீழ் கொண்டு வருவது போன்ற அச்சுறுத்தல்களை மன்மோகன் சிங் முன்வைத்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

மேற்கு வங்காள இடதுசாரி ஆட்சியில், அமெரிக்க எதிர்ப்பு பலமாக இருப்பதால் பயிற்சிக்கான பாதுகாப்பினை வழங்குவது கடினம் என்ற அடிப்படையிலேயே மேற்கு வங்காள அரசு இந்த கோரிக்கையை வலியுறுத்தியிருந்தது. இதில் நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் ஒரு மாநில அரசை கலைத்து விடுவதாக பிரதமர் அச்சுறுத்தல் விடுக்குமளவிற்கு இந்திய-அமெரிக்க உறவுகள் வலுவடைந்திருக்கின்றன என்பதுதான.;
சமீப காலமாக இந்தியா தனது செல்வாக்கிற்குட்பட்ட பகுதிகளில் இராணுவ, பொருளாதார ரீதியான சமநிலையை தொடர்ந்தும் பேணிக் கொள்வதில் சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதாகவே பல அரசியல் அவதானிகளும் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக சமீப காலங்களில் சீனா இந்தியாவின் செல்வாக்கிற்குட்பட்ட பகுதிகளில் தனது இராணுவ மற்றும் பொருளாதார செல்வாக்கை விஸ்தரித்து வருவது குறித்து இந்தியா கலக்கமடைந்திருப்பதன் விழைவே இந்திய-அமெரிக்க மூலேபாய நெருக்கத்தை துரிதப்படுத்தியிருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.

எனவே தனது செல்வாக்கிற்கு உட்பட்ட பகுதிகளில் இராணுவ, பொருளாதார ரீதியான சமநிலையை தொடர்ந்தும் பேணிக் கொள்வதற்கு அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்வதே பொருத்தமானதென இந்தியா மிகவும் திடமாகவே நம்புவது போல் தெரிகிறது.

சமீப காலமாக இந்திய அரசியல் அரங்கில் இடம்பெற்றும் வரும் சம்பவங்கள் அதனைத்தான் தெளிவுபடுத்துகின்றன. இந்திய அதிகார வர்க்கத்தினரைப் பொறுத்த வரையில் அமெரிக்காவுடன் இணைந்து கொள்வதை அவர்கள் மிகவும் வெளிப்படையாகவே ஆதரித்து வருகின்றனர்.

இந்திய அதிகார வர்க்கத்தினர் ஒரு எழுச்சியுறும் இந்தியாவை விரும்புவர்களாக இருக்கின்றனர். அமெரிக்கா எதிர்பார்க்கும் நலனும் இந்திய அதிகார வர்க்கத்தினரின் எதிர்பார்ப்பும் சந்திக்கும் புள்ளி இதுதான். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அது, ~ஒரு எழுச்சி பெறும் இந்தியாவை| சீனாவிற்கு எதிரான ஒரு பொருளாதார, இராணுவ, புவிசார் அரசியல் எதிர் இடையாக மாற்ற விரும்புகின்றது. இதில் அமெரிக்கா எந்தவிதமான இரகசிய தன்மைகளையும் கடைப்பிடிக்கவில்லை.

2000 ஆம் அண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது புஸ் வெளிப்படையாகவே சீனாவை ஒரு ~மூலோபாயப் போட்டியாளர்| என்று அறிவித்திருந்தார்.

இந்த கருத்தை ஆமோதிப்பது போன்றே அப்போது புதுடில்லியின் பாதுகாப்பு அய்வு நிறுவனத்தின் இயக்குனர் ஜஸ்ஜித் சிங் ~சீனா, பொருளாதார ரீதியாக, தொழில் நுட்ப ரீதியாக, அரசியல் ரீதியாக மற்றும் இராணுவ ரீதியாக எமது பிரதான மூலோபாய போட்டியாளர்| என்று குறிப்பிட்டிருந்தார். இது புஸ்சின் பிரகடனத்திற்கான இந்திய ஆமோதிப்பாக இருந்தது.

இந்திய அதிகாரப் பிரிவினரின், சீனா குறித்த அச்சத்தை அமெரிக்கா சீனாவிற்கு எதிரான மூலோபாய காய் நகர்த்தல்களுக்கு பயன்படுத்திக் கொள்கின்றது. இந்தியாவை ஒரு தடுமாறும் அரசு என்றே அமெரிக்க அதிகார பிரிவினர் கருதுகின்றனர்.

சமீபத்தில் அமெரிக்க புலனாய்வுப் பிரிவான ஊஐயு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவை உலகத்தின் புவிசார் அரசியல் முறையில் ~ஊசலாட்ட அரசு| என்று குறிப்பிட்டிருந்தது, அதாவது, இந்தியா ஒன்று அமெரிக்காவுடன் சேர்ந்து கொள்ளும் அல்லது அமெரிக்காவிற்கு எதிரான கூட்டணியில் சேர்ந்து கொள்ளும்.

ஆனால் அமெரிக்காவோ இந்தியாவை ஒரு மூலோபாய பங்காளராக மாற்றிக்கொள்வதில் சமீப காலமாக மிகுந்த ஈடுபாட்டைக் காட்டி வந்திருக்கிறது. அமெரிக்கா தனது தந்திரோபாய நகர்வுகளிற்கு இந்திய, அதிகார வர்க்கத்தினர் எதிர்பார்புக்களையே ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொண்டது.

இந்தியா தனது அணுசக்தி ஆற்றலை பெருக்கிக் கொள்வதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. ஜ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெறுவதற்கான இந்தியாவின் தொடர் முயற்சிக்கு இது ஒரு முக்கிய பரிமாணத்தை கொடுக்குமென்றே இந்தியா கருதுகின்றது. இந்தியாவை உலக வல்லரசாக்குதல் என்ற கனவில் திழைத்திருக்கும் இந்திய மேல்தட்டு அதிகார வர்க்கத்தினர் இதில் மிகுந்த ஈடுபாட்டைக் காட்டுகின்றனர்.

இந்தியா ஆரம்பத்தில் தனது இராணுவ தேவைகளுக்காக ரஸ்யாவுடன் நெருக்கமான உறவுகளை பேணிவந்தது. ரஸ்யாவின் மூலமே இந்தியா தனது பெருமளவான இராணுவ தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டது. இந்த காலத்தில் அமெரிக்கா பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவுகளை பேணிவந்தது.

தவிர, இந்த காலத்தில் அமெரிக்கா பாகிஸ்தானில் ஏற்பட்ட இராணுவ ஆட்சி மாற்றங்களை புதுடில்லிக்கும் மொஸ்கோவிற்கும் இடையில் ஒரு எதிரிடையாக பயன்படுத்தி வந்ததாகவே ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்த வரையில் உலக புவிசார் அரசியலில் ஏற்பட்டு வரும் பிளவுகளில், ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்ற நிலையிலேயே தனது வெளிநாட்டுக் கொள்கைகளை திட்டமிட்டு வந்ததாக கருதும் மேற்கு ஆய்வாளர்கள், இதன் காரணமாகவே இந்தியா, அமெரிக்க, ஜரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உறவுகளைப் பேணிக்கொண்டே சீனா, ரஸ்யா போன்ற நாடுகளுடனும் உறவுகளைப் பேணிக்கொள்ள முடிந்ததாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் இன்று இந்தியா அவ்வாறான தன்மையிலிருந்து விலகி முற்றிலும் அமெரிக்காவை சார்ந்தே தனது இராணுவ தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முயல்கின்றது.

சமீபத்தில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட புதிய பாதுகாப்பு உடன்படிக்கையின் கீழ் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களையும், ஆயுத திட்டங்களையும் இந்தியா கணிசமான அளவு வாங்குவதற்கு வழி செய்வதுடன் மற்றும் ஜ.நா அங்கிகாரம் இல்லாமல் வெளிநாடுகளில் இந்திய-அமெரிக்க கூட்டு நடவடிக்கைகளுக்கான வாய்ப்பினையும் பெற்றிருக்கிறது.

இந்திய-அமெரிக்க உறவினைப் பொறுத்த வரையில் அது மூலோபாய ரீதியாக முன்னர் எப்போதும் இல்லாதளவிற்கு நெருக்கி வந்தது பி.ஜே.பி காலத்திலாகும். 1998 ஆம் ஆண்டு இந்தியா தன்னை ஒரு அணுவாயுத நாடாக பிரகடனம் செய்தது.

இந்த காலத்தில் தொடரான போட்டி அணுவாயுத சோதனைகளை நடாத்தியதற்காக கிளின்டன் அரசு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதித்தது. ஆனால் 1999 இல் காஸ்மீரின் கார்கில் பிராந்தியத்தில் இடம்பெற்ற இந்திய - பாகிஸ்தான் ஆதரவு குழுக்களுக்கு இடையிலான மோதல்களை, அமெரிக்கா மீண்டும் உள்நுழைவதற்கான ஒரு மூலோபாய துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொண்டது.

இதனை தொடர்ந்து இந்தியா, முன்னர் எப்போதுமில்லாதளவிற்கு அமெரிக்காவுடன் நெருக்கங்களை பேணிக்கொள்ள தலைப்பட்டது. அமெரிக்காவை சாராத இந்தியாவின் உலகளாவிய வளர்ச்சி என்பது ஒருபோதும் சாத்தியமற்ற ஒன்று என்பதே பி.ஜே.பியின் நிலைப்பாடாக இருந்தது. இதனை வாஜ்பாயின் வார்த்தையில் சொல்வதானால் அமெரிக்காவின் உதவி இல்லாமல் இந்தியா தனக்குரிய அணுவாற்றலை பெருக்கிக் கொள்ள முடியாது, அதற்காக நாம் ஒரு மாபெரும் சமரசத்தை செய்து கொள்ள வேண்டும்.

உண்மையில் அந்த காலத்தில் பி.ஜே.பி. தலைமையில் அணிதிரண்டிருந்த இந்திய அதிகார வர்க்கத்தினர் பி.ஜே.பியின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போயினர். அவர்கள், அமெரிக்க ஆதரவின் தேவைப்பாட்டை 1962 சீன-இந்திய எல்லை யுத்தம் வரை நீட்டி விவாதிப்பவர்களாக இருந்தனர்.

அமெரிக்க ஆதரவு இருந்திருந்தால் அன்று இந்தியா, சீனாவிடம் தோல்வி அடைந்திருக்காது என்பது அவர்களது வாதமாக இருந்தது. இன்று பெரும்பாலான இந்திய அதிகார பிரிவினர் அமெரிக்கா, இந்திய உறவில் பி.ஜே.பியின் நிலைப்பாட்டை ஆதரிப்பவர்களாகவே இருக்கின்றனர்.

நான், மேலே குறிப்பிட்டது போன்று இன்றை உலக அரசியல் போக்கு என்பதே புவிசார் அரசியல் நலன்களில் ஏற்படும் இணைவு மற்றும் பிளவுகளினால்தான் தீர்மானிக்கப்படுகின்றது. இன்றைய உலக புவிசார் அரசியல் போக்கு குறித்து பேசிவரும் அரசியல் அவதானிகள் முன்னர் முன்று வகையான கூட்டுக்கள் குறித்து பேசிவந்தனர். எதிர்காலத்தில், உலகளாவிய இராணுவ, பொருளாதார மற்றும் அரசியல் முன்னெடுப்புகள் என்பது, இந்த மூன்று கூட்டுக்களுக்கிடையிலான முரண்;பாடுகளாக இருக்கும் என்பதே அவர்களது கணிப்பாக இருந்தது.

இது பற்றி எனது முன்னைய கட்டுரைகளிலும் குறிப்பிட்டிருக்கிறேன். இதில் முதன்மையான கூட்டாகக் கருதப்படுவது அமெரிக்காவும், அதனுடன் இராணுவ கூட்டுக்களை வைத்திருக்கும் நாடுகளுமாகும்.

இரண்டாவது, அமெரிக்க அழுத்தங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமென்ற நோக்கில் இணைந்திருக்கும் நாடுகளாகும். இதில் ரஸ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் முதன்மையாகவும், ஈரான், வடகொரியா போன்றவை இரண்டாம் நிலையிலும் இடம்பெற்றிருந்தன.

செப்ரெம்பர் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற நிகழ்ச்சி நிரல் ஒன்றை முன்னெடுத்து வருகிறது. இந்த நிகழ்ச்சி நிரலுக்கு தாம் இரையாகிவிடக்கூடாது என்பதுதான் மேற்படி இரண்டாவது கூட்டில் இடம்பெறும் நாடுகளுக்கு இடையிலான பொது இணக்கப்பாடாகும்.

இதில் கருத்தில் கொள்ள வேண்டிய பிறிதொரு விடயமும் இருக்கின்றது. அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்டு வரும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்ச் சுலோகத்தை மேற்படி கூட்டில் இருக்கும் நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளும் அச்சத்துடன் நோக்கினாலும் மறுவளமாக அதே சுலோகத்தையே, அந்நாடுகளும் தமது உள்நாட்டு சிக்கல்களை கையாள்வதற்கான வாய்ப்பாக பயன்படுத்தி வருகின்றன. இது பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

இதில்; முன்றாவது கூட்டாக நோக்கப்படுவது ஜரோப்பிய யூனியன் ஆகும். ஆனால் இன்றைய சூழலில் இரண்டாவது கூட்டில் உள்ள நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகள்தான் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.

அமெரிக்காவைப் பொறுத்த வரையில், அது மேற்படி இரண்டாவது கூட்டின் இராணுவ, பொருளாதார நகர்வுகளினால் நீண்டகால நோக்கில் தனது மேலாதிக்கத்திற்கு ஏற்படப்போகும் ஆபத்தின் மீதே கவனம் கொள்கிறது. இந்த பின்னணியில்தான் அமெரிக்கா தற்போது ஆசியாவை நோக்கி தனது முழு கவனத்தையும் திருப்பி இருக்கிறது.

இந்தியாவையும் சீனாவையும் பொறுத்த வரையில் ஒருவருடன் ஒருவர் மோதல் இன்றியே வளர்வதற்கான வாய்ப்புக்கள் தாராளமாக உள்ளதாக, இந்திய மற்றும் சீன அதிகாரிகள் தொடர்ந்து கூறிவந்தாலும், சீனா தனது மேலாதிக்கத்திற்கான காய்களை நகர்த்துவதில் தீவிரம் காட்டி வருகின்றது.

சீனா, தற்போது மத்திய, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் தனது மேலாதிக்கத்திற்கான தந்திர வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது. அதில் ஒரு பகுதியாகத்தான் சீனா தற்போது இலங்கையுடனான தனது நெருக்கத்தை அதிகரித்திருக்கிறது.

இந்தியா, பதட்டம் கொள்ளும் இடமும் இதுதான். இது பற்றி இந்தியாவை எச்சரிக்கும் வகையில் கருத்துக்கூறும் முன்னாள் இந்திய படைத்துறை அதிகாரி ஒருவர், தற்போதைய நிலைமைகள் முன்னர் மியன்மாரில் (பர்மா) இந்தியாவிற்கு ஏற்பட்ட அனுபவம் போன்று அமைந்து விடும் ஆபத்துள்ளதாக குறிப்பிடுகின்றார்.

1990களில் சீனா பர்மாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணிய வேளையில் இந்தியா மியன்மாரின் இராணுவ அதிகாரப் பிரிவினரிலிருந்து தானாகவே சற்று தூர விலகி நின்றது.

ஆனால் அதுவே பின்னர் இந்தியாவை நோக்கி திரும்பும் இராணுவ தந்திரோபாயமாக மாற நேர்ந்தது. தற்போது இலங்கையுடன் சீனா நெருங்கிவரும் சூழலில் இந்தியா எட்ட நிற்குமானால் மியன்மாரில் ஏற்பட்டது போன்ற ஒரு நிலமையையே, இந்தியா-இலங்கை விடயத்திலும் எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என அவர் எச்சரித்;திருந்தார். இந்த பின்புலத்தில்தான் இந்தியா மீண்டும் இலங்கை அரசியலில் அதிக கவனத்தை செலுத்தி வருகின்றது.

இந்தியாவைப் பொறுத்த வரையில் இதிலுள்ள சிக்கல் என்னவென்றால் அதற்குள்ள இலங்கை தொடர்பிலான கடந்த கால அனுபமாகும். எடுத்தோம், கவிழ்த்தோம் என்று இந்தியாவால் எதனையும் செய்ய முடியாதுள்ளது.

எனவே, நாம் இந்த இடத்தில் ஒரு விடயத்தை குறித்துக்கொள்ளலாம். இந்தியா ஒரு எல்லை வரைக்கும் தனது சொந்த நிகழ்சி நிரலை முன்னெடுக்கும் அதேவேளை தனது மூலோபாய சகாவான அமெரிக்காவின் மூலமும் இலங்கை அரசியலில் சில காய்களை நகர்த்தலாம் என்ற சந்தேகங்கள் நிராகரிக்கக்கூடிய ஒன்றல்ல.

இந்தியா நிச்சயமாக எதிர்காலத்தில் இவ்வாறானதொரு பின்புலத்தில் சில நடவடிக்கைளை எடுக்கக்கூடும். சமீப காலமாக அமெரிக்கா, விடுதலைப் புலிகள் பற்றி குறிப்பாக அமெரிக்காவின் உள்ளக உளவுப்பிரிவான குடீஐ விடுதலைப் புலிகளின் ஆயுத விநியோகம் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தி வருவதற்கும், சந்தேகத்தின் பேரில் சிலரை கைது செய்திருப்பதற்கும் இவ்வாறானதொரு பின்புலம் இருக்க அதிக வாய்புண்டு.

சமீபத்தில் நியுவ் லெப்ட் றிவியுவ் (நேற டுநகவ சுநஎநைற) சஞ்சிகையின் அரசியல், பொருளாதார ஆய்வுக் குழு தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருக்கும் விடயம் இந்த இடத்தில் அதிக கவனத்துக்குரியது. அமெரிக்கா, இந்தியாவை ஒரு உலக வல்லரசாக்கும் நிகழ்சி நிரலின் ஒரு பகுதியாகவே இந்தியாவின் விருப்பத்திற்கு இணங்க இலங்கையின் தமிழ்ப் புலிகள் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கையில் பதட்டமும், யுத்தமும் தீவிரமடைந்திருக்கும் நிலையில், சிறிலங்கா அரசு சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் அதிகளவில் நெருங்கிச் சென்றிருக்கிறது.

மேற்கு நாடுகள் சிறிலங்காவிற்கான இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை குறைத்திருக்கும் நிலையில், தற்போது சிங்களத்திற்கான பிரதான இராணுவ வழங்குநர்களாக சீனாவும் பாகிஸ்தானுமே இடம்பிடித்திருக்கின்றன.

இந்த நிலமைகளுக்கு நீண்ட காலத்தில் தான் பலியாகிவிடக்கூடாது என்று கருதும் இந்தியா இலங்கை ஆட்சியாளர்களுடான தனது உறவில் சமநிலையை பேணிக்கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கின்றது.

சிங்களத்திற்கான இராணுவ உதவிகளை குறைத்திருப்பதாக கூறிக்கொள்ளும் இந்தியா சமீப காலமாக இலங்கையில் தனது முதலீட்டு நடவடிக்கைளை விஸ்தரித்து வருகின்றது.

இலங்கையின் திருகோணமலை பகுதியில் ஏற்கனவே எண்ணைக் குதங்களை குத்தகைக்கு எடுத்திருக்கும் நிலையில், தற்போது அனல் மின் நிலையம் ஒன்றை நிறுவும் முயற்சியிலும் இறங்கியிருக்கின்றது.

உண்மையில் இந்தியாவின் திட்டம் முதலீட்டின் மூலம் தனக்கான இராணுவ தளங்களை விஸ்தரிப்பதுதான். இங்கு இராணுவ விஸ்தரிப்பிற்கு பொருளாதார முலாம் பூசப்பட்டிருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்த வரையில் நோர்வேயின் மத்தியஸ்த காலத்தில் இருந்ததை விட நிலமைகள் தற்போது மேலும் சிக்கலடைந்துள்ளது. நோர்வேயின் காலத்தில் இந்தியா சமாதான முயற்சிகள் குறித்து ஒரு பார்வையாளராக தன்னை காட்டிக்கொண்டாலும் மேற்கின் ஊடாக அழுத்தங்களை பிரயோகிக்கும் தகமையைக் கொண்டிருந்தது. நோர்வேயும் இந்த காலத்தில் நாம்; இந்தியாவுடன் இணைந்தே முடிவுகளை எடுத்து வருகின்றோம் என்பதை வெளிப்படுத்துவதில் இரகசியங்கள் எதனையும் பேணிக் கொள்ளவில்லை.

இந்த காலத்தில் நோர்வே என்ற பெயரின் பின்னால் அமெரிக்க, ஜரோப்பிய சக்திகள் திரண்டிருந்ததுடன,; சிங்களத்திற்கு உதவி வழங்கும் பிரதான வழங்குனரான ஜப்பானும் கூட இருந்தது.

இவ்வாறான அணிச்சேர்க்கையின் பின்னால் இரண்டு தெளிவான நோக்கங்கள் இருந்திருக்கலாம். ஒன்று புலிகளின் பின்தளமாக இருக்கும் மேற்கில், புலிகளுக்கு நெருக்கடிகளைக் கொடுப்பதன் மூலம், ஒரு (தாம் விரும்பும்) தீர்வை நோக்கி புலிகளை தள்ளுதல். மற்றையது, சிங்கள அரசை அதிதீவிர சிங்கள பெருந்தேசிவாதத்திலிருந்து கீழிறக்குவதற்காக பொருளாதார ரீதியான நிர்ப்பந்தங்களை கொடுப்பது.

இதற்குரிய ஆற்றல் அந்த நேரத்தில் ஜப்பானுக்கு இருந்தது. அதாவது மேற்கினூடாக புலிகளையும், ஜப்பானூடாக சிங்களத்தையும் ஒரு சமரசத்திற்கு கொண்டு வருவதன் மூலம் இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை ஏற்படுத்துதல்.

இங்கு குறித்துக்கொள்ள வேண்டிய பிறிதொரு விடயம் அமெரிக்கா சீனாவிற்கு எதிரிடையாக அங்கீகரித்து வரும் இன்னொரு ஆசிய சக்தி ஜப்பான் ஆகும். ஆனால் இந்த காய்நகர்த்தல்கள் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியை கைப்பற்றியதால் வலுவிழந்தது.

இந்தியாவைப் பொறுத்த வரையில் இலங்கையில் ஒரு சுமூகமான சூழல் நிலவ வேண்டுமென்பதில் அக்கறை கொண்டிருந்தாலும், பிரச்சினைக்கான தீர்வு தனது பழைய நிலைப்பாட்டை மீறிச் செல்வதாக இருந்துவிடக்கூடாது என்பதில் அது எப்போதுமே கவனமாக இருக்கின்றது.

இந்தியாவின் பழைய நிலைப்பாடு என்பதும் மேற்கு தமிழர்கள் மீது திணிக்க விரும்பிய தீர்வு என்பதும் தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களை எந்த வகையிலும் பூர்த்தி செய்யக்கூடியதல்ல என்பது இன்னொரு விடயம்.

சமீப காலமாக சிங்கள பெருந்தேசியவாதம் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு உச்ச நிலைக்கு சென்றிருக்கும் சூழலில், இலங்கையில் ஒரு சுமூக நிலமையை ஏற்படுத்துவதற்கான மேற்கின் சகல முற்சிகள் தோல்விடைந்திருப்பது வெளிப்படையான ஒன்று.

எனவே இந்த பின்புலத்தில் மேற்கு யதார்த்தங்களை விளங்கிக்கொண்டு தமிழர் போராட்டத்தின் நியாங்களை புரிந்து கொள்ளுமா? இப்படியொரு கேள்வி பல தமிழத் தேசியர்களிடம் உள்ளது.

மேற்கு விளங்கிக் கொள்ளுமா விளங்கிக் கொள்ளதா என்பது வேறு பரிசீலனைகுரியது. ஆனால் இன்றைய உலக அரசியல் போக்கில் புவிசார் அரசியல் கூட்டுக்கள் குறிப்பாக அமெரிக்கா ஆசியாவை நோக்கி திரும்பியிருக்கும் சூழலில் ஆசிய பிராந்திய அரசியலில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள், தெற்காசிய பரப்பில் அதிர்வுகளை ஏற்படுத்தி வரும் தமிழர் போராட்டத்திலும் சில தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இதனை நமக்கு சாதகமான ஒன்றாக மாற்றிக் கொள்வது நமது கையில்தான் இருக்கிறது.

நன்றி: தினக்குரல் வார ஏடு (18.05.08)

3 comments:

தேவன் மாயம் said...

மேற்கு வங்காள இடதுசாரி ஆட்சியில், அமெரிக்க எதிர்ப்பு பலமாக இருப்பதால் பயிற்சிக்கான பாதுகாப்பினை வழங்குவது கடினம் என்ற அடிப்படையிலேயே மேற்கு வங்காள அரசு இந்த கோரிக்கையை வலியுறுத்தியிருந்தது. இதில் நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் ஒரு மாநில அரசை கலைத்து விடுவதாக பிரதமர் அச்சுறுத்தல் விடுக்குமளவிற்கு இந்திய-அமெரிக்க உறவுகள் வலுவடைந்திருக்கின்றன என்பதுதான.;///

உண்மைதான்.

தேவன் மாயம் said...

தமிழர் விடுதலைப் போராட்டம் என்பது வெறுமனே தமிழர் தேசத்துடன் மட்டுப்பட்டது அல்லது இலங்கை அரசியலுடன் மட்டுப்பட்டது இன்னும் சற்று மேலே போனால் பிராந்திய அரசியலுடன் தொடர்புபட்டது என்றெல்லாம் நாம் நம்புவோமானால் நம்மை விட முட்டாள்கள் வேறு யாருமில்லை.///
ஆம் மிகச்சரி..

Vel Tharma said...

நல்ல பதிவு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி