அதிகரித்திருக்கும் கடத்தல்கள், காணாமல்போதல்களை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டுமென மனித உரிமை மீறல் விடயங்களைக் கையாழ்வதற்கு நிறுவனக் கட்டமைப்பு அவசியம் என அமெரிக்கா, இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
“நிறுவனக் கட்டமைப்பு இலங்கைக்கு அவசியம். எனினும், தமது கடமைகளை திறமையான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கான அதிகாரம் உரியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்” என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர்கள் தொடர்பான அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் எரிக்கா பார்க்-ரக்லஸ் தெரிவித்துள்ளார்.
“மனித உரிமை பாதுகாப்பு என்பது சட்டத்தில் மாத்திரம் இருக்கக்கூடாது, நடைமுறையிலும் இருக்க வேண்டும்” என பிராக்ஸ்-ரக்லசை மேற்கோள்காட்டி கொழும்பு அமெரிக்கத் தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
மனித உரிமைகள் உள்ளிட்ட விடயங்களில் அமெரிக்கா கொண்டிருக்கும் அக்கறை குறித்தும் அவர் கவனம் செலுத்தியிருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு சிறுவர் போராளிகளை விடுவித்துள்ளமையையும் அவர் வரவேற்றுள்ளார். குறைந்த காலப்பகுதிக்குள் அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படுவதை அரசாங்கமும், சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினரும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனைவிட, கடத்தல்கள், காணாமல்போதல்கள் போன்ற விடயத்திலும் சிறந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை இருப்பதையும் மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர்கள் தொடர்பான அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் எரிக்கா பார்க்-ரக்லஸ் சுட்டிக்காட்டியிருந்ததாக அமெரிக்கத் தூதரகத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment