Thursday, 15 May 2008

விடுதலைப் புலிகள் ஏட்டுக்காக சு.ரவி எழுதிய - 'அடுப்புக்குள்ளே அணைக்கப்பட்ட குட்டித்தீச்சுவாலை"

ஏப், 23, தேய்பிறையின் நிலாவொளியில் சிங்களப்படைகள் ஒரு சந்தடியற்ற நகர்வைச் செய்து வட போரரங்கின் கிளாலி - முகமாலை-கண்டல் முன்னரங்க நிலைகளைக் கைப்பற்ற முயன்றன.

சுமார் ஐயாயிரம் இராணுவத்தினரைக் கொண்ட சிங்களத்தின் இரண்டு டிவிசன் படையணிகள் இந்த வலிந்த தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன.

படையெடுப்பு நேரமாக இரவைத் தேர்ந்தெடுத்த சிங்களப்படைகள் அதிகாலை 2.30 மணியளவில் புலிகளின் முன்னரங்க நிலைகளைத் திடீரெனத் தாக்கினர்.

சுமார் 12 கி.மீ நீள முன்னரங்கைக் கொண்டுள்ள வடபோரரங்கில் ஏறக்குறைய 7 கி.மீ நீள முன்னரங்க நிலைகளை அந்த இரவுப்படையெடுப்பின் தாக்குதல் வலயமாக சிங்களப்படைகள் மாற்றின.

முன்னரங்கைக் காவல் காத்த புலி வீரர்களை விட பலமடங்கு அதிகமான படையினரின் திடீர் பாய்ச்சலில் பெரும்பாலான புலிகளின் அரண்கள் சிங்களப்படையிடம் வீழ்ச்சி கண்டன.

சண்டை தொடங்கிய சில நிமிட நேரங்களுக்குள் புலிகளின் அரண்களில் பெரும்பாலானவை வீழ்ந்ததால் படையெடுப்பின் வெற்றி தமக்குரியதாகி விட்டது என்று சிங்களத்தளபதிகள் நம்பிச் செருக்கடைந்தனர்.

ஆனால் புலிகளிடம் மாற்றுத்திட்டங்கள் இருந்தன. முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட முறியடிப்பு வியூகத்தை புலிகள் நடைமுறைப்படுத்தத் தொடங்கினர்.

துல்லியமான எறிகணை வீச்சுக்களின் துணையுடன் புலிகளின் முறியடிப்பு வீரர்கள் களமிறக்கப்பட்டனர். களத்தின் காட்சி மெல்ல-மெல்ல மாற்றமடையத் தொடங்கியது புலி வீரர்கள் நடாத்திய பத்தரை மணி நேர முறியடிப்புத்தாக்குதலின் விளைவாக, நண்பகல் ஒரு மணியளவில், கிளாலி- முகமாலை-கண்டல் முன்னரங்கம் மீண்டும் முழுமையாக புலிகளின் கைகளிற்கு வந்து சேர்ந்தது

பெருநம்பிக்கையுடன் சிங்களப் படைகள் செய்த இந்தப் படையெடுப்பை புலி வீரர்கள் முறியடித்து வட போரரங்கில் மீண்டும் ஒரு படுதோல்வியை எதிரிப்படைக்குப் பரிசளித்திருந்தனர்.

இந்தப் பெரும் சண்டையில் 200ற்கும் மேற்பட்ட சிங்களப் படையினர் கொல்லப்பட்டனர். 61 படையினர் கால்களை இழந்தனர். சுமார் 600 படையினர் காயப்பட்டுக் களத்தை விட்டு அகற்றப்பட்டனர். 6 டாங்கிகள் சிதைக்கப்பட்டன.

ஒரு இராணுவ வெற்றியுடன் தனது புதிய இராணுவக் கூட்டாளியான ஈரானிய அதிபரை கொழும்பு விமான நிலையத்தில் வரவேற்க விரும்பிய மகிந்த ராஜபக்சவின் ஆசை நிறைவேறவில்லை. தோல்வி முகத்துடன் ஈரானிய அதிபர் வரவேற்கப்பட்டார்.

தோல்வியால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்க அந்த இரண்டு டிவிசன் படையணிகளின் தளபதிகளை சிங்களப் படைத்தலைமை தண்டனை இடமாற்றம் செய்தது.

வட போரரங்கில் மண் கவ்விய அந்த இரண்டு டிவிசன் படையணிகளும் சாதாரணமானவையல்ல சிங்களப் படைக்கட்டமைப்பில் மிக மிக முக்கிய படையணிகள் அவை. சிங்கள தேசமே ஆராதிக்கும் சிறப்புப் படையணிகள் அவை 53 ஆவது, 55 ஆவது டிவிசன்களே அவையாகும்.

தமிழர் தேசத்தில் நடந்த மரபுப்போர்களில் தமிழ் மக்களுக்கு எதிராக அவலங்களை அள்ளி விதைத்த சிங்களப்படையணிகள் இவை.

ரிவிரச என்ற சூரியக்கதிர் நடவடிக்கை மூலம் வலிகாமத்தின் 5 இலட்சம் மக்களையும் ஒரு இரவில் இடம்பெயர்ந்தோட வைத்ததில் பெரும்பங்கு வகித்தது இந்த 53 ஆவது படையணியாகும்.

அத்துடன், சத்ஜெய என்ற பெயரில் கிளிநொச்சி மாவட்ட மக்களை அகதிகளாக்கி - அவலங்களை விதைத்ததும் இந்த 53 ஆவது படையணியாகும்.

குடாநாடு மற்றும் கிளிநொச்சியில் இந்த 53 ஆவது படையணி அவலத்தை விதைக்க வன்னிப் பெருநிலப்பரப்பில் 55 ஆவது படையணியும் அத்துடன் இணைந்து அவலங்களை விதைத்திருந்தது.

ஜெயசிக்குறு நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் இந்த இரண்டு சிறப்பு டிவிசன்களின் பங்கு அதிகமானது.

கட்டாய வெற்றியை எதிர்பார்த்த சிங்களப்படைத் தலைமை தமது நம்பிக்கை நட்சத்திரங்களான இந்த இரண்டு டிவிசன் படையணிகளைக் களமிறக்கியும் வெற்றிபெற முடியவில்லை என்பது அவர்களுக்கு பாரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

ஆனையிறவைக் கைப்பற்றுவது என்பது சிங்கள ஆட்சிபீடத்தின் கனவுத்திட்டமாகவே காட்சியளிக்கின்றது. வன்னியில் போர் தொடங்கிய கடந்த ஒன்றரை வருட காலமாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இராணுவ வெற்றியை சிங்களப் படைகளால் பெறமுடியவில்லை. ஒரு ஆறுதல் வெற்றியாக மடுவைக் கைப்பற்றுவதை எண்ணமாகக் கொண்டிருந்தார்கள். ஆயினும் புகழ்பெற்ற புனிதச்சிலையான மடுமாதா சிலையை கோவிலில் இருந்து அகற்றி பாதுகாப்பான இடம் நோக்கி நகர்த்துவது என்ற மன்னார் பேராயரின் முடிவு சிங்கள அரசுக்கு ஒரு அரசியல் தோல்வியைக் கொடுத்தது.

இந்த நிலையிலேயே சிங்கள மக்கள் மத்தியிலும் உலக ஊடகங்கள் மத்தியிலும் புகழ் பெற்றிருந்த இராணுவ கேந்திர நிலையமான ஆனையிறவைக் கைப்பற்றி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மதிப்புப்பெற மகிந்த அரசு முயன்றது.

விளைவு ஆனையிறவு நோக்கிய படை நகர்வைச் செய்வது என்று சிங்கள அரசு முடிவெடுத்தது. அதில் முதல் கட்டமாக வட போரரங்கில் புலிகள் அமைத்திருக்கும் முதலாவது முன்னரங்க வரிசையைக் கைப்பற்றுவது, அதன்பின் தனது கவசப்படையின் துணையுடன் புலிகளின் இரண்டாவது முன்னரங்க வரிசையைக் கைப்பற்றி பளையை ஆக்கிரமித்து அங்கிருந்து ஆனையிறவை நோக்கி நகர்வது என்று படிமுறைப் படையெடுப்பைச் செய்ய சிங்களப்படைத் தலைமை திட்டமிட்டிருந்தது.

இத்தகைய பல கட்டப் படையெடுப்புகள் நிகழும்போது அத்தகைய நாட்களில் உள்ள சில முக்கியமான தேதிகளை சிங்கள மக்களுக்கு நினைவூட்டி சில இராணுவப் பழிவாங்கல் செயல்களையும் நிறைவேற்ற சிங்களத் தளபதி சரத் பொன்சேகா ஆசைப்பட்டிருந்தார்.

ஏப்பிரல் மாதத்தின் 22ம், 25ம், 25ம் திகதிகள் எமது போரின் மிக முக்கிய நாட்கள்.

ஆனையிறவுத்தளத்தை புலிகள் மீட்டெடுத்த வரலாற்றுப் பெருமை கொண்ட நாள் இதே ஏப், 22 ஆகும் 2000 ஆம் ஆண்டு அதே போன்று வடபோரரங்கில் சிங்களப்படைகள் செய்த தீச்சுவாலை படை நடவடிக்கை முறியடிக்கப்பட்ட நாள் ஏப். 25 ஆகும். 2001 ஆம் ஆண்டு இதேவேளை சிறிலங்கா இராணுவத்தளபதி சரத் பொன்சேகா மீது நடந்த வெற்றியில் முடியாத தற்கொலைத்தாக்குதல் நடந்த நாள் ஏப் 25ம் திகதி 2006ம் ஆண்டு.

சிங்களப் படையின் முதற்கட்ட நகர்வு முயற்சி வெற்றி பெற்றிருந்தால் குறித்த இந்தத் தேதிகளையும் - சம்பவங்களையும் சிங்கள மக்களுக்கு நினைவூட்டி ஒரு பழிவாங்கல் பதிலடியை புலிகள் இயக்கம் மீது நிகழ்த்தி விட்டதாக சிங்களத்தளபதி இறுமாப் பெய்தியிருப்பார். அது நடைபெறாததால் ஆனையிறவு நோக்கிய படையெடுப்புத் தொடரும் என்று அறிவித்து சமாதானமடைய வேண்டிய நிலைக்கு சரத் பொன்சேகா தள்ளப்பட்டுள்ளார்.

இந்தப் பெரும் சண்டையில் புலிகள் பெற்ற வெற்றியை இரண்டு வகையான இராணுவ பரிமாணங்களில் வைத்துப் பார்த்து தமிழினம் பெருமையும் உற்சாகமும் அடைகின்றது.

சிங்களத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களான 53 மற்றும் 55 ஆவது படையணிகள் செய்த ஒரு பாரிய படைநகர்வு முயற்சியை வட போரரங்கக் காவலர்கள் முறியடித்து வெற்றிவாகை சூடியுள்ளமை போரியல் பார்வையில் ஒரு முக்கிய இராணுவ சாதனை என்பதில் ஐயமில்லை.

சிங்களத்தின் இந்த சிறப்பு டிவிசன்களின் தோல்வியானது சிங்களப்படையின் உளவுரனையும் சிதைத்துள்ளது. இந்தச் சிறப்பு டிவிசன்களால் பெறமுடியாத வெற்றியை தம்மால் பெறமுடியுமா என்று குடாநாட்டில் நிலைகொண்டுள்ள சிங்களச் சிப்பாய்களிடம் கேள்வி எழும்பியிருக்கும் இதை மனதில் வைத்துத்தான் வன்னிப் போரில் சிங்கள அரசின் கனவு சிதைந்து விட்டது என்று சிங்கள இராணுவ அமைச்சர் ஒருவர் கொழும்புப் பத்திரிகையில் எழுதியிருந்தார்.

இரண்டாவது இராணுவ விடயம் மிக முக்கியமானது. மரபுப்போரில் திறமையும் அனுபவமும் கொண்ட சிங்களத்தின் அந்த இரண்டு டிவிசன் படையாட்களை வட போரரங்கைக் காவல் காத்த இளம்புலிகள் வெற்றி வாகை சூடியுள்ளனர் என்பதே அந்த மிக முக்கிய இராணுவ அம்சமாகும்.

வீட்டிற்கு ஒருவர் என்ற ஆட்சேர்ப்புத் திட்டத்தின் அடிப்படையில் சேர்க்கப்பட்ட அந்த இளம் வீரர்கள் மரபுப்போரில் போதிய அனுபவம் பெறாதவர்கள். சிறுசிறு சண்டைகள் மூலம் பட்டறிவு பெற்ற இளம் வீரர்கள் இந்தப்பெரும் சமரை எதிர்கொண்டு திறமை காட்டியுள்ளனர்.

பயிற்சி-பாடம்-அனுபவம்-முயற்சி-துணிவு என்ற தலைவர் அவர்கள் வகுத்துக்கொடுத்த சண்டைத்திறனுக்கான போரியல் திட்டங்களால் இந்த இளம்புலி வீரர்கள் புடம்போடப்பட்டு முறியடிப்புத் தாக்குதல்களை திறமையுடன் நடாத்திய வீராதி வீரர்களாக தம்மை நிரூபித்துள்ளனர்.

இளம் புலிகளின் இந்தப் போரியல் திறன் தமிழ் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வருங்காலத்தில் பாரிய இராணுவ வெற்றிகளைக் குவிக்கும் வல்லமையுடன் புலிகள் இயக்கம் வலுப்பெறுகின்றது என்று தமிழீழ தேச பக்தர்கள் உற்சாகமடைகின்றனர்.

இந்தச் சண்டையில் 5000ம் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர் என்று இராணுவத்தலைமை அறிவித்திருந்தது. அதேவளை பதினைந்தாயிரத்திற்கும் (15,000) அதிகமான எறிகணைகளையும் அந்தப் பத்தரை மணிநேரச் சண்டையில் சிங்களப் படைகள் பயன்படுத்தியிருந்தன என்றும் களமுனைத்தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரிய ஆட்பலத்துடனும் சூட்டுவலுவுடனும் இந்தப் படைநகர்வை சிங்களப் படைகள் செய்திருந்தும் படையினரால் வெற்றிபெறமுடியாமல் போனது ஏன்! என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.

'ஒரு போரில் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ! ஆயுத பலமோ! அல்ல, மன உறுதி தான்" என்று தலைவர் பிரபாகரனின் போரியல் பொன்மொழி ஒன்று உண்டு. இந்த இராணுவப் பொன்மொழி மிகச்சரியானது என்று புலி வீரர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.

அன்று சிங்களப்படை திடீரென்று புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது பாய்ந்தபோது, அங்கே காவலிருந்த முன்னரங்கப் போராளிகளின் எண்ணிக்கையைப் போல பல மடங்கு சிங்களப் படையினர் களமிறங்கியிருந்தனர். அந்தச் சண்டையில் புலிகள் பயன்படுத்திய எறிகணைப் பலத்தைவிட பல மடங்கு எறிகணை வீச்சையும் சிங்களப்படை நடாத்தியிருந்தது. எனினும் புலிகளே சண்டையை வென்றனர்.

சண்டைக்களத்தில் புலி வீரர்கள் காட்டிய மனவுறுதி தான் வெற்றிக்குக் காரணம். ஓர்மம் நிறைந்த இந்த மன உறுதியை போராளிகளிடம் புகட்டிவிடும் வல்லமைக்காக தலைவர் பிரபாகரன் அவர்கள் இராணுவ ஆய்வாளர்களால் புகழ்ந்து போற்றப்படுகின்றார்.

சிங்களப்படையைச் சிதைக்கும் கொல் களமாக வடபோர்முனை காணப்படுகின்றது. 2000 ஆம் ஆண்டு நடந்த தீச்சுவாலைக்கு எதிரான சமரிலிருந்து இன்றுவரை நான்கு பெரிய சமர்களையும் பல சிறுசிறு சண்டைகளையும் வட போரரங்கம் சந்தித்துள்ளது.

இந்த சண்டைகளில் சுமார் ஆயிரம் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தனி ஒரு முன்னரங்கில் இவ்வளவு படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற உண்மையை கருத்தில் கொண்டே வட போரரங்கை சிங்களப்படைக்கான கொல்களம் என்று சிங்கள இராணுவ ஆய்வாளர் ஒருவர் வர்ணித்திருந்தார்.

இன்றைய நிலையில் மகிந்த அரசின் மானப் போர்க்களமாக வட போரரங்கம் மாறிவிட்டது. அதனால் மேலும் மேலும் இந்தப் போரரங்கில் படையெடுப்புக்களை நடாத்த சிங்களப் படைத்தலைமை முயலும்.

குடாநாட்டில் நிலைகொண்டுள்ள 53 மற்றும் 54 ஆவது டிவிசன்கள் சிதையும் வரை சிங்களத்தின் படையெடுப்பு ஆசை ஓயப்போவதில்லை. அந்தச் சிறப்பு டிவிசன்களின் சிதைவு குடாநாட்டுப் படைகளின் இருப்பைக் கேள்விக்குறியாக்கி விடும் அத்தகைய ஒரு இராணுவ பரிமாணத்தை நோக்கியே வடபோரரங்கம் விரிந்து செல்கின்றது.

நன்றி: விடுதலைப் புலிகள் ஏடு (09.05.08)

No comments: