Thursday, 15 May 2008

விடுதலைப் புலிகள் ஏட்டுக்காக கா.வே.பாலகுமாரன் எழுதிய - 'இதெல்லாம் ஒரு அரசியல் ஏமாற்று வித்தை"

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் என்பதன் பொருள் என்ன? அது ஏற்படுத்தப்போகும் அரசியல் தாக்கங்களெவை? கொள்கை வழிநின்று அதனை முற்றிலுமாகப் புறக்கணிப்பதன் நியாயப் பாடுகளெவை? இன்று இத்தேர்தலில் போட்டியிடுவோர் அவர்கள் எத்தரப்பினர்களாயிருந்தாலும், தத்தம் அரசியல் இருப்பிற்கு ஏற்படும் ஆபத்தினைத் தவிர்க்கவும், பொதுவில் தேர்தல் என்றாலே ஏற்படும் கவர்ச்சி, சலனம் என்பனவற்றினடிப்படையிலும், 'செஞ்சோற்றுக் கடனுக்காகவும்", நீண்ட காலத்தில் இத்தேர்தல் அவர்கள் சார்ந்த மக்களிற்கு விளைவிக்கப்போகும் பெரும் தீங்கினை அறிந்தும் அறியாத நிலையிலும், இத்தேர்தல் ஒரு மோசடி நாடகம், சனநாயகமே கடத்தப்பட்டு மகிந்தர், பசில் குழுமத்தின் பணயக் கைதி என்பதை அறிந்த நிலையிலும் கூட போட்டியிடுவதை எம்மால் புரிய முடிகின்றது.

அதேவேளை இலக்கொன்றை நோக்கிப் பாதை வகுத்துப் பயணிக்கும் நாம் இத் தேர்தலென்பது குறிக்கும் பாரதூரமான முக்கிய மூன்று பரிமாணங்களைக் குறித்துச் சில கருத்துக்களைப் பதிவு செய்ய விரும்புகின்றோம்.

முதலில் கிழக்கு மாகாணத் தேர்தலென்பது ஒரு தேர்தல் வழி முறையேயல்ல. இதுவொரு அரசியல் சதி. இது பற்றித் திரு.சம்பந்தன் குறிப்பிடுகையில், 'கிழக்கு மாகாணம் என்றொரு தனியானதொன்றிருப்பதாகவே நாம் கருதவில்லை. எனவே இத்தேர்தல் சட்டவிரோதமானது" (நேசன் செவ்வி 27ஃ04) என்றார். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட ஒழுங்கில் இத் தேர்தலென்பது,

அ. சிங்கள அரசின் உச்சக் கபடத்தனம் நிரம்பிய அரசியல் நயவஞ்சகத்தை.
ஆ. தமிழ்த் தேசியத்திற்கு நாமும் தமிழர் என்போர் இழைக்கும் தேசியத் துரோகத்தை.
இ. தமிழ் மக்களோடான தனது கனவான் உடன்பாட்டினை தானே மீறிய இந்தியத் தவறினை - உணர்த்தி நிற்கின்றது.

இது இவ்விதம் நேருமென்பதாலே தமிழினப் பற்றாளர் 1987 இல் இந்திய உடன்பாட்டினை எதிர்த்தனர். குறிப்பாகப் பெரும் தலைவர் பிரபாகரன் அவர்கள் மிகக் கடுமையான நிலைப்பாட்டினை அன்று ஏன் எடுத்தார் என்பது இன்று புரிகின்றது.

எனவே எமது வாசக அன்பர்களை இற்றைக்கு இருபத்தொரு வருடங்களுக்கு முன்னதான இன்னொரு கரும் யூலையின் கடைசி நாட்களுக்குக் கூட்டிச்செல்ல விரும்புகின்றோம். வரலாற்றின் பாடங்களைக் கற்காதவர் மீண்டும் அதே வரலாற்றினை வாழச் சபிக்கப்படுவர். இது அறிஞர் ஒருவர் கூற்று.

1987 யூலை 23 ஆம் நாளிலிருந்து இக்கதை தொடர்கிறது. அன்று சுதுமலை அம்மன் கோவில் வளாகத்திலிருந்து இந்தியாவால் அழைத்துச் செல்லப்பட்ட பிரபாகரன் அவர்கள் கரும்பூனைகள் பாதுகாப்பு வழங்கப் புதுதில்லி அசோக் விடுதியில் தங்கவைக்கப்பட்டமை, ('பாலா அண்ணை மீண்டும் பொறியில் மாட்டிக்கொண்டேன்") அங்கு வந்த திக்சிற் தனது அங்கிக்குள் இருந்து ஒரு ஆவணத்தைக் கையிலெடுத்து இதுதான் உடன்பாடு இரு மணித்தியாலங்கள் அவகாசமுள்ளது. நல்ல முடிவினை சொல்லுங்கள் என்றமை, எந்த நிலையிலும் இலங்கை- இந்திய உடன்பாட்டினை ஏற்பதில்லை எனப் பிரபாகரன் முடிவெடுத்தமை திக்சிற்றோடு சினத்துடன் வாதிட்டமை, நான்கு தடவைகள் எம்மை ஏமாற்றியுள்ளீர்கள் எனக் கொதிப்புடன் திக்சிற் கூறிய பொழுது 'அப்படியானால் நான்கு தடவைகள் இந்தியாவிடமிருந்து எனது மக்களைக் காப்பாற்றியுள்ளேன்" எனக் காலம் காலமாக என்றும் நிலைக்கப்போகும் தனது பட்டறிவின் மொழியினைப் பிரபாகரன் உதிர்த்தமை, எதுவுமே சரிவராத நிலையில் மறுநாள் காலை கொழும்பில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போகவேண்டிய நிலையில் ராஜீவ் காந்தி அவர்கள் யூலை 28 நள்ளிரவில் பிரபாகரன், அவர்களையும் அன்ரன் பாலசிங்கத்தையும் சந்தித்தமை, அங்கும் தனது, நிலைப்பாட்டினை மிகத் தெளிவாகப் பிரபாகரன் விளக்கியமை, ('இந்த ஒப்பந்தம் தமிழ் மக்கள் நலனைப் பேணவில்லை. மாறாகப் பாதிக்கின்றது. ஆகவே இதனை ஏற்க முடியாது") பிரபாகரனை மாற்ற முடியாதென்கிற நிலையில், 'உடன்பாட்டினை ஏற்க வேண்டாம். ஆனால் எதிர்க்க வேண்டாம்" என ராஜீவ் வேண்டியமை, பண்ருட்டி இரங்கிக் கேட்டமை, 'உங்களுடன் இரகசிய உடன்பாட்டினைச் செய்யவும் ஆயத்தமாகவுள்ளேன்" என ராஜீவ் கூறியமை, இதனை எழுத்திலிட வேண்டிய போது 'இந்தியப் பிரதமர் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? இதுவொரு கனவான்கள் உடன்பாடாக இருக்கட்டும்" எனப் பண்ருட்டி கூறியது, 'நீங்கள் எதற்கும் கவலைகொள்ளத் தேவையில்லை கொடுத்த வாக்குறுதிகளை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன் அமைச்சர் சொல்லியது போல இதுவொரு எழுதப்படாத புநவெடநஅநn யுபசநநஅநவெ ஆக இருக்கட்டும்" என்றார் ராஜீவ். தொடர்ந்து பாலா அண்ணை எழுதுகிறார், ராஜீவ் காந்தி இல்லத்திலிருந்து விடுதி வந்த போது நேரம் அதிகாலை மூன்றாகி விட்டது. 'அண்ண இருந்து பாருங்கோ, இந்த இரகசிய ஒப்பந்தமும் வாக்குறுதிகளும் ஒன்றும் நிறைவேறப் போவதில்லை. இதெல்லாம் ஓர் அரசியல் ஏமாற்று வித்தை" என்று விரக்தியுடன் கூறிவிட்டுத் தனது அறைக்குப் பிரபாகரன் சென்றுவிட்டார்.

அன்று நள்ளிரவில் (யூலை 28, 87) ஆழ்ந்த நித்திரையிலிருந்த பிரபாகரனையும் பாலசிங்கத்தையும் தட்டியெழுப்பினர் இந்தியப் புலனாய்வாளர்கள். இன்று எதுவுமே தெரியாதது போல அல்லது விளங்காதது போல அரசியல் ஆழ் நித்திரையிலிருக்கும் தமிழக, மத்திய அரசுகளைத் தட்டியெழுப்ப இனமானப் பற்றாளர் தொல். திருமாவளவன் முயல்கின்றார்.

23.04.08 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க, ம.தி.மு.க என்ன கூறின? முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் ஜே.ஆருக்குமான உடன்பாட்டின் படி வடக்குக் கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்படக் கூடாதென்கிற இலங்கை- இந்திய உடன்பாட்டிற்கெதிராக நடைபெறவுள்ள கிழக்குத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாக முன் இந்திய அரசு தலையிட்டு இதனை நிறுத்த வேண்டுமென ஒருமித்துக் கூறின.

ஆனால் திருமாவளவன் சொல்கின்றார். 'இருதரப்பிற்கும் இடையில் பேச்சுக்களைத் தொடங்க இந்தியா முயல வேண்டுமென நிறைவேற்றப்பட்ட சட்டப்பேரவை தீர்மானத்தில் சிங்களத்தின் அரசியற் சதிமுயற்சி பற்றி எதுவுமேயில்லை என்பது ஏமாற்றமளிக்கின்றது. இவ்விடயத்தில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்". (தீர்மானம் நிறைவேற்றியமைக்கு நன்றி தெரிவித்த திருமாவளவன் அறிக்கையில் இவை கூறப்பட்டிருந்தன). திரு. அன்ரன் பாலசிங்கமும் தனது போரும் சமாதானமும் நூலில் 182 ஆம் பக்கத்தில் சொல்கின்றார். 'வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வதிவிடம் என ஒரு பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளமை ஒரு தனித்துவ நிருவாக அலகாக வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டமை மட்டும் இவ்வுடன்பாட்டில் குறிப்பிடத்தக்கவை. ஆயினும், இவ்விணைப்புத் தற்காலிகம் எனக் குறிப்பிட்டமை ஏமாற்றம் தருவது".

எனவே, இப்பொழுது இறுதியில் நடந்ததென்ன? சிங்கள இனவெறி ஜே.வி.பி கொடுத்த முறைப்பாட்டினையடுத்து 2006 அக்டோபரின் சிங்கள உச்ச நீதிமன்றம் கிழக்கை வடக்கிலிருந்து பிரித்தது. பிராந்திய உபகண்ட வல்லரசின் உடன்பாட்டிற்குக் கரிபூசியது. அதைச் சந்தணமாகச் சம்பந்தப்பட்ட நாடு எடுத்துக்கொண்டதா? (இந் நீதிமன்றத் தீர்ப்பினை நாம் ஏற்கவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரையில் அது இப்போது தலையிடாமையை (ழேn-ஊழஅஅவைவயட) கடைப்பிடிக்கின்றது. இந்தியா, இலங்கை- இந்திய உடன்பாட்டினை தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் அது நிச்சயம் தொடரும்.

கேள்வி என்னவென்றால் அவர்கள் இது குறித்து என்ன செய்வார்கள்? அதை எப்போது செய்வார்கள்? என்பது தான். அதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனத் திரு.சம்பந்தன் மேற்படி செவ்வியில் கூறியுள்ளார்) எவ்வாறிருப்பினும் இந்தியாவின் நீடித்த அமைதி சம்மதம் என்றே சிங்களத்தால் பொருள் கொள்ளப்பட்டுள்ளதென்பதே இன்றைய உண்மை.

இவற்றினை விடத் துண்டிக்கப்பட்ட கிழக்கில் தேர்தலென்பது குறிப்பது மிகப் பாரதூரமான அரசியல் விளைவுகளைக் கொண்டவை. இவற்றினைச் சுருக்கித் தொகுத்தால் சிங்களப் பேரினவாதத்தின் இலக்குகள் எவை என்பது தெளிவாகும்.

01. திம்புப் பிரகடனத்தை அதில் கைச்சாத்திட்ட சிலரைக் கொண்டே சிங்களம் மீற வைத்துள்ளது.

02. இதன் வழி தொடர்ச்சியான வரலாற்று வழி தாயகக்கோட்பாட்டுடன் அதன் வழி தன்னாட்சி உரிமையை அதன் வழி தேசியத்தை மறுக்க வைத்துள்ளது.

03. இற்றைவரை தென் தமிழீழத்தில் செய்யப்பட்ட இனக்கொலை வடிவங்களான குடியேற்றங்கள் வழி நிலப்பறிப்பு என்பனவற்றை ஏற்க வைத்துள்ளது.

எனவே பாரிய இமாலயத் தவறு என்கிற தேசியத் துரோகமிழைக்கப்படுகின்றது. கிழக்கிலிருந்து கொலைப்படையான அதிரடிப்படை விலக்கப்பட்டதைக் கண்டித்த ஒரேயொரு தமிழரான சங்கரியாருக்கு டெய்லி மிரர் (ஏப்ரல் 4) ஏட்டில் அதைப் பொறுக்காமல் குசல் பெரேரா எழுதியவற்றின் சில வரிகள் எம் மக்களின் குரலாக ஒலிக்கின்றது.

தமிழர் போராட்டத்தின் அனைத்து அடிப்படைகளையும் மறுக்கிற சங்கரிக்கு ஒரு சங்கதி என்கிற தலைப்பில் சொல்லப்படுவது இது 'திம்புப் பிரகடனத்தை ஏற்றுக் கையெழுத்திட்ட பலரும் (புலிகள் தவிர) நீங்கள் கூறிவந்த தொடர் தாயகம் துண்டாடியதை ஏற்றுத் தேர்தலிலும் நிற்கின்றீர்கள். இதன் பொருள் என்னவென்று தெரியுமா? வடக்குக் கிழக்கினைப் பிரிப்பதற்கு எந்தக் காரணத்தினைச் சிங்களத் தீவிரவாதிகள் இதுவரை சொன்னார்களோ அதை நீங்கள் ஏற்கின்றீர்கள் என்பதே. திம்புப் பிரகடனம் குறித்த உங்கள் பதிலென்ன? பத்தாம் திகதிக்கு முன் பதில் தர முடியுமா? மாகாண சபைத் தேர்தலை ஏற்று மறுகணமே நீங்கள் தமிழ்த் தேசியத்தின் துரோகிகளாகி விடுகின்றீர்கள், பின்வருவனவற்றை இழந்தவராகி விடுகின்றீர்கள். இதனாலே தீவிரவாதிகள் தமிழர் தாயகத்தை துண்டாட விரும்பினார்கள். தாயகமில்லாமல் போவதால் தேசியமில்லை, தேசியமில்லையெனில் தன்னாட்சியுரிமை இல்லை. தன்னாட்சியுரிமை இல்லையெனில், அதிகாரப் பகிர்வுக்கு இடமில்லை. வரலாற்றின் குப்பையை நோக்கிப் பயணிக்கும் மகிந்தரின் அதே பேரூந்திலே நீங்களும் பயணிக்கின்றீர்கள்".

இறுதியாக ஒரு விடயம் என்னதான் காரணங்கள் சொல்லப்பட்டாலும் இத்தேர்தல் தமிழ் பேசும் மக்களிடையே மோதலைத் தூண்டுவதற்கான ஏவுதளமாக இப்போதிருந்தே அமையப் போவதை (யார் முதலமைச்சர், கிஸ்புல்லாவா? பிள்ளையானா?) உணர முடிகின்றது.

இனவாதம் கக்கும் தயானின் தந்தையாரான மேர்வின் அவர்கள் எப்போதுமே கிழக்கை இன்னொரு பொசுனியாவாக்குவது சிங்களத் தரப்பின் நோக்கம் என்று கூறிவந்தவர். (பொசுனியாவில் குரோசியர், பொசுனிய, முஸ்லிம்கள், சேர்பியர் மூவருமே தமக்குள் மோதியமை அறிந்ததே). எனவே எப்படிப் பார்த்தாலும் எங்கள் தாயகத்தில் பெரும்பான்மையானவர்கள் தமிழ் பேசும் மக்களே. தமது ஒற்றுமையின் வழியே இச்சிங்களச் சதியை முறியடிக்க முடியும்.

நன்றி: விடுதலைப் புலிகள் ஏடு (09.05.08)

No comments: