Monday, 19 May 2008

கிழக்கிற்கு மாத்திரம் பொலிஸ் அதிகாரமா; ஏனைய மாகாணங்களுக்கும் வழங்க வேண்டும்: முதலமைச்சர்கள் கோரிக்கை

புதிதாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் கிழக்கு மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுமாயின் ஏனைய மாகாணசபைகளுக்கும் அந்த அதிகாரம் பகிரப்படவேண்டுமென ஏனைய மாகாண முதலமைச்சர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிழக்கு மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுமாயின் ஏனைய மாகாணசபைகளுக்கும் அந்த அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேம்லால் திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

“கிழக்கு மாகாணசபைக்கு மாத்திரம் இந்த அதிகாரம் வழங்கப்படாது. அவ்வாறு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுமாயின் அது அனைத்து மாகாணசபைகளுக்குமே வழங்கப்படும் என்பது தெளிவு” என அவர் கூறியுள்ளார்.

பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட வேண்டுமென பல்வேறு தடவைகள் முதலமைச்சர்கள் மாநாட்டில் வலியுறுத்தியிருந்ததாக ஊவா மாகாணசபை முதலமைச்சர் விஜித் விஜயமுனி.டி.சொய்சா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து இதற்கு முன்னர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதியின் தரப்பிலேயே தற்பொழுது பந்து உள்ளது. எனவே, அவரே இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை நான்கு மாதங்களுக்கு ஒருதடவை கூடும் மாகாணசபை முதலமைச்சர்கள் மாநாடு எதிர்வரும் 29ஆம் 30ஆம் திகதிகளில் பெல்வெஹரவில் கூடவுள்ளதுடன், அதில் இந்தவிடயம் குறித்து ஆராயப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செல்வதுரை சந்திரகாந்தன் கலந்துகொள்வார் எனத் தெரிவித்திருக்கும் முதலமைச்சர்கள் ஒன்றியத்தின் தலைவர் தென் மாகாணசபை முதலமைச்சர் ஷான் விஜயலால்.டி.சில்வா, இதற்கான அழைப்பு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

13வது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைய கிழக்கு மாகாணசபைக்குப் பொலிஸ் அதிகாரங்கள் பகிரப்படும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன முன்னர் கூறியிருந்தார்.

No comments: