Friday, 2 May 2008

பாடநூல்கள் இன்றி பரீட்சைக்கு தோற்ற வேண்டிய நிலையில் தமிழ் மாணவர்கள்

-த.மனோகரன்-

கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரணதரப் பரீட்சை டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளமை நாடறிந்த உண்மை. இப்பரீட்சைக்கு தமிழ்மொழியும் இலக்கியமும் என்ற பாடம் தமிழ்மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு கட்டாய பாடங்களில் ஒன்றாகவும் உள்ளது.

இவ்வாண்டு பழைய புதிய பாடத்திட்டங்களின் அடிப்படையில் இருவேறு வினாத்தாள்கள் தயாரிக்கப்படவுள்ளன. இவ்வாண்டு முதல் முறையாகப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் வினாத்தாள்களுக்கும் ஏற்கனவே, பரீட்சைக்குத் தோற்றியவர்கள் பழைய பாடத்திட்டத்தின்படியான வினாத்தாள்களுக்கும் விடையளிக்க வேண்டிய நிலையிலுள்ளனர்.

தேசிய கல்வி நிறுவகத்தால் தயாரிக்கப்பட்டு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் பதிப்பித்து வெளியிடப்படும் பாடநூல்கள் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது .அதுவே இன்றைய நிலை.

இவ்வாண்டு புதிய பாடத்திட்டத்தின் கீழ் கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இதுவரை தமிழ்மொழியும் இலக்கியமும் பாடத்தின் மூன்றாவது வினாத்தாளாக அமையும் இலக்கிய பாடத்திட்டத்திற்குரிய பாடநூல் பாடசாலைகளுக்கு வழங்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

தமிழ்மொழியும் இலக்கியமும் பாடவினாத்தாள் ஐந்து மணித்தியாலங்களைக் கொண்டது. ஒரு மணித்தியால வினாத்தாளான பகுதி ஒன்று நாற்பது புள்ளிகளுக்குரியது. இரண்டாம் பகுதிக்கான இரண்டு மணித்தியால வினாத்தாள் எண்பது புள்ளிகளுக்கானது. இதில் கட்டுரை, கடிதம், சுருக்கம், கிரகித்தல் போன்ற வினாக்கள் அடங்குகின்றன.

மூன்றாம் பகுதிக்கான இரண்டு மணித்தியாலத்திற்கான வினாத்தாளுக்கான புள்ளிகள் எண்பதாகும். இது தமிழ் இலக்கியம் தொடர்பானது.

மொத்தப் புள்ளிகளில் ஐந்தில் இரண்டு பங்கிற்குரிய வினாத்தாளுக்குரிய பாடத்திட்டத்திற்கான பாடநூல் பரீட்சைக்கு இன்னும் ஏழு மாதங்களேயுள்ள நிலையிலும் வழங்கப்படாமலிருப்பது தொடர்பில் எவரும் உரிய கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. சிங்கள மொழியும் இலக்கியமும் பாடத்திற்கான சகல பாட நூல்களும் ஏற்கனவே மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கல்விப்பொதுத் தராதரப்பத்திர சாதாரணதர வகுப்புகளென்பது 10 ஆம் 11 ஆம் தரங்கள் இரண்டையும் உள்ளடக்கியதாகும்.

இவ்வாண்டு பரீட்சைக்குத் தமிழ்மொழி மூலம் புதிய பாடத்திற்கமைய தோற்றும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு அதாவது 2007 ஆம் ஆண்டிலேயே 10 ஆம் தரத்திற்குரிய பாடநூல் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழ் இலக்கியம் புதிய பாடத்திட்டத்திற்கமைவான பாடநூல் இதுவரை வெளியாகவில்லை. அதேபோல் பதினொராம் ஆண்டிற்குரிய பாடநூலும் மாணவர்களுக்குக் கிட்டவில்லை என்பது கவலை தரும் விடயமாகும்.

பாடத்திட்டத்தின் படியாகவே வினாத்தாள்கள் தயாரிக்கப்படும் என்பது யதார்த்தமானது. இந்நிலையில் தமிழ் மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் கட்டாய பாடமான தமிழ்மொழியும் இலக்கியமும் பாடத்தின் மூன்றாவது பகுதியான இலக்கிய வினாக்களுக்கு எவ்வாறு விடையளிக்க முடியும் என்பது பற்றி கல்வித்துறை சார்ந்தோர் கவனத்தில் கொள்ளாது பொறுப்பற்று இருப்பது கவலைக்கும், கண்டனத்திற்கும் உரியது.

இது புதியபாடத்திட்டத்தின் கீழ் இவ்வாண்டு பரீட்சைக்குத் தோற்றும் தமிழ்மொழி மூல மாணவர்களுக்குப் பாரிய இழப்பை ஏற்படுத்தும் ஏதுவாக அமையும் நிலையை மறுப்பதற்கில்லை.

இவ்வாறான நிலைமை ஏற்படுவதற்கு தேசிய கல்வி நிறுவகம் உரிய காலத்தில் பாடநூலைத் தயாரித்து கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திட்டம் கையளிக்காமை காரணமாயமைந்ததா? அல்லது கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் அக்கறையீனம் தமிழ் மாணவர்கள் பாதிப்படையும் நிலைக்குத் தள்ளியுள்ளது என்பது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலனைப் பாதிக்கும் இச்செயற்பாடானது அவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளில் மட்டுமல்ல வேறுபல வழிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

அரச நியமனங்களுக்கு ஆட்சேர்க்கும் போது பரீட்சைக்குத் தோற்றிய முதலாவது மொழி அதாவது தமிழ்மொழி மூல பரீட்சார்த்திகள் தமிழ்மொழியும் இலக்கியமும் பாடத்தில் குறைந்தது ("சீ" தரம்) திறமைச்சித்தியாவது பெற்றிருப்பது கட்டாயமானது. அவ்வாறுள்ள போது உரிய பாடநூல்களை மாணவர்களுக்கு வழங்காது உரிய வினாத்தாளுக்கு விடையளிப்பது எவ்வாறு? இருநூறு புள்ளிகளில் எண்பது புள்ளிகளுக்குரிய வினாத்தாளுக்கான பாடங்களைக் கற்காது எவ்வாறு விடையளித்து திறமைச் சித்தியைப் பெறமுடியும்?

பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் உள்ளிட்ட கல்வித்துறை சார்ந்தோறும் ஆசிரிய தொழிற்சங்கங்களும் மௌனம் காப்பது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிப்படையச் செய்யும் என்பதை அவர்களும் உணரவேண்டும்,

தமிழ்மொழிமூலம் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள பாரிய அநீதியாகிய இந்நிலையை தெளிந்து,விரைந்து செயற்பட வேண்டியது கல்வித்துறையினரின் பொறுப்பு. பிரதிக்கல்வி அமைச்சர் மு.சச்சிதானந்தனுக்கு இவ்விடயம் சமர்ப்பணம் செய்யப்படுகின்றது.

No comments: