”கிழக்கு மாகாண மக்களிடையே இன, மத ரீதியாகப் பிளவுகளை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முயன்று வருகின்றது. அங்கு அரசினால் ஜனநாயகம் சாகடிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறானதொரு அராஜக அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதைத் தவிர வேறு வழி எமக்கில்லை. எனவே, அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைந்து அரசிற்கெதிராகப் போராட முன்வர வேண்டும்” என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அழைப்புவிடுத்தார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வாக்களிப்பில் அரசு நடத்திய வன்முறைகள், மோசடிகளுக்கு எதிராக ஐ.தே.க.வும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் இணைந்து நேற்று (மே 16) வெள்ளிக்கிழமை மருதானையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: ”கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆயுதம் மற்றும் வன்முறை மூலமே அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது. கிழக்கு விடுவிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள மக்களுக்கு ஜனநாயகத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ரவூப் ஹக்கீம் உட்பட மற்றும் பலர் போட்டியிட்ட நிலையில் அராஜக நடவடிக்கை மூலம் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது.
குறிப்பாக ஆயுத பலத்தின் மூலம் அம்மக்களை பயமுறுத்தி வாக்குக் கொள்ளையில் அரசாங்கம் ஈடுபட்டதால் அம்மக்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. அது மாத்திமன்றி அங்கு இன மற்றும் மதங்களுக்கு இடையிலான பிள்வை ஏற்படுத்தி வருகின்றது.
இதனை தடுப்பதற்கும் மீண்டும் நாட்டில் ஜனநாயகத்தை மலரச் செய்வதற்கும் இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதைத் தவிர வேறு தெரிவு எம் முன் இல்லை. இன்றுடன் இந்த ஆர்ப்பாட்டத்தை நிறுத்தாது அரசைக் கலைப்பதற்கு நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளது.
எனவே, நாட்டு மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கும் நாட்டு நலன்கருதி இன்று எம்முடன் இணைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் போல அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஐக்கியப்பட வேண்டும் என்றார் எதிர்க்பட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
source:thesamnet

No comments:
Post a Comment